
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் ராஜிநாமாவை ஏற்பதாக மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு வழக்கு தொடர்பாக, உறுப்பினர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மதுரை மேயர் இந்திராணி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து மதுரை அண்ணா மாளிகை கூட்டரங்கில் துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்திராணியின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும் மக்களின் முக்கிய பிரச்னைகளைக் கூட்டத்தில் விவாதிக்க மறுத்ததாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டரங்கில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மேயர் ராஜிநாமா
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு அரசு நிர்ணயித்த வரியைவிடக் குறைவான வரியை விதித்து முறைகேடு நடைபெற்றதாக கடந்த 2024-ஆம் ஆண்டில் புகார் எழுந்த நிலையில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் சொத்து வரியைக் குறைத்து கணக்கிட்டதும் இதன்மூலம் மாநகராட்சிக்கு ரூ. 150 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு உள்ளான மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் 5 பேரும் நகரமைப்புப் பிரிவு தலைவர்கள் 2 பேரும் பதவி விலகினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அவர்கள் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேயர் வ. இந்திராணியின் கணவர் பொன். வசந்த் (திமுக), ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்பட 23 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும், வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன. மேயரை பதவி நீக்கம் செய்யக் கோரி அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் இரு முறை மாமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இருப்பினும், கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆக. 12-ம் தேதி கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் சிறையிலிருந்த மேயரின் கணவர் பொன். வசந்த், கடந்த 9-ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
தொடர்ந்து மேயர் இந்திராணி தனது பதவி விலகல் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை அளித்துள்ளார். பின்னர் இன்று (அக். 17) துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்படி மேயர் வ. இந்திராணி தனது பதவி விலகல் கடிதத்தை அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.