
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜிநாமா செய்த நிலையில் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு குறைவான வரியை விதித்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட வழக்கில் மேயர் இந்திராணி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
தொடர்ந்து மதுரை அண்ணா மாளிகை கூட்டரங்கில் துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு இந்திராணியின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும் மக்களின் முக்கிய பிரச்னைகளைக் கூட்டத்தில் விவாதிக்க மறுத்ததாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் மாநகராட்சி கூட்டரங்கில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே மண்டலத் தலைவர்கள் 5 பேர், நகரமைப்பு, வரி வருவாய் நிலைக் குழுத் தலைவர்களைத் தொடர்ந்து தற்போது மேயரும் ராஜிநாமா செய்துள்ளதால் அந்தப் பணியிடங்கள் முழுவதும் காலியான நிலையில், மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, 45 ஆவது வார்டில் கழிவுநீர் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த துணை மேயர் தி. நாகராஜன் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.