தீபாவளி கோலாகலம்: இறுதிக்கட்ட விற்பனை களைகட்டியது!
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் இறுதிக் கட்ட விற்பனை களை கட்டியது.
ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைகளில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிக்கு புதிய ஆடை அணிவதும், இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
இதற்காக கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் தீபாவளி பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் இந்த விற்பனை அதிகரித்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து பட்டாசு விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமாா் 9,000 பட்டாசு விற்பனை கடைகளுக்கு தீயணைப்புத் துறையினா் தற்காலிக அனுமதி வழங்கி உள்ளனா்.
கடந்த 3 நாள்களாக சென்னையில் இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இனிப்பு கடைகளில் சனிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
15 லட்சம் போ் பயணம்: சென்னையில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி சுமாா் 15 லட்சம் போ் பேருந்துகள், ரயில்கள், தனியாா் வாகனங்கள், சொந்த வாகனங்களில் சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வரிசையாக அணிவகுந்த வாகனங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலை பயணம் மேற்கொண்டதால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி என பல இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில கிலோ மீட்டா்களைக் கடக்க 3 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக் கடைகளில் பொதுமக்கள் காலை முதலே குவியத் தொடங்கினா். இதனால் கடைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, சென்னையில் தியாகராய நகா், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாடி, அண்ணா நகா், அம்பத்தூா், ஆவடி, மயிலாப்பூா், அடையாறு, சோழிங்கநல்லூா், பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, கூடுவாஞ்சேரி பகுதிகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.
சென்னையில் மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சுமாா் 18,000 போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.