சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது குறித்து, அதிகாரிகளை கடிந்துகொண்டார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.
செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை, அரசு அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக மாறி வருகின்றனரா ? இத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக நேற்று 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 500 கன அடி நீர் ஏரியின் பாதுகாப்பு கருதி திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் இன்று இதனை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள அதிகாரியிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் பிரதிநிதியான என்னிடம் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரியும் தகவலோ ஆலோசனையோ தெரிவிக்கவில்லையே ? அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக செயல்படுகின்றீர்களா? ஏதாவது பிரச்சினை என்றால் பொதுமக்களிடம் நிற்பது நாங்கள் தானே ? என்பது போன்ற கேள்விகளை கேட்டார்.
மேலும் இத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை எனவும் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.