மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை.
மேட்டூர் அணை.கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு 5ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாகவும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக விநாடிக்கு 35,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, இன்று(அக். 23) மாலை 6 மணிக்கு வினாடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை விநாடிக்கு 35,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு மாலை 6மணி முதல் விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 60,000 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

இதனால் மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஸ்டான்லி, காவிரி கரையோர மாவட்டங்களுக்கு 5-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு விநாடிக்கு 45,000 கன அடியாக அதிகரிக்கப்படும் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு 60,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே காவிரி கரையோரம் வாசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணை உபரி நீர் கால்வாய் ஓரங்களில் உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், தொட்டில்பட்டி தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மேட்டூர் வருவாய்த் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் அருகே செல்லக்கூடாது, காவிரியில் குளிக்கவும் துணி துவைக்கவும் செல்லக்கூடாது என்றும் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உபரி நீர் போக்கி வழியாக அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் அதனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Summary

Due to the increase in water inflow to Mettur Dam, a level 5 flood warning has been issued for people along the banks of the Cauvery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com