
ஒருவருக்கு திடிரென ஒரு அழைப்பு வருகிறது. அதில் அவருக்குு நெருக்கமானவர்கள், தாங்கள் ஒரு அவசரத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறி பணம் கேட்கிறார்கள்.
உடனடியாக அவர் உதவுவாரா மாட்டாரா? கண்டிப்பாக உதவுவார்கள். ஆனால், இதில் சைபர் மோசடியாளர்கள் பின்னணியில் இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் காவல்துறையினர்.
அதாவது, மோசடியாளர்கள், ஒருவரது குரலை க்ளோன் செய்து, அவர் குரலில் பேசுவது போல அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசி பணத்தை முறைகேடு செய்வார்கள் என்கிறார்கள்.
பொதுவாக அமெரிக்காவில் இந்த குற்றங்கள் அதிகம் நடந்துள்ளதாகவும், பேரப்பிள்ளைகள் பேசுவது போல முதியவர்களிடம் பேசி பணம் பறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றன தரவுகள்.
இந்த குரல் பதிவுகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதுதானே உங்கள் கேள்வி? சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிடும் விடியோக்களில் இருக்கும் குரலை பதிவு செய்துதான் இந்த மோசடி நடப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது செய்யறிவுக்கு, ஒரு குரல் பதிவின் 3 வினாடிகள் போதும், அதனை க்ளோன் செய்து அதே குரலில் பேசுவதற்கு என்கின்றன தகவல்கள். அது மட்டுமல்லாமல், பெரும்பாலானவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது விடியோக்களைப் பதிவு செய்திருப்பதால், குரல் பதிவு பெறுவது அவ்வளவு ஒன்றும் கடினமில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த மோசடி இந்தியாவில் எப்படி நடக்கிறது என்றால், காவல்துறை அதிகாரி என்று ஒருவர் செல்போனில் அழைத்துப் பேசுவார். உங்களுக்குத் தெரிந்த நபரின் பெயரை சொல்லி அவர் விபத்தை ஏற்படுத்தியிருப்பது போன்ற ஏதோ ஒரு அவசரத்தில் சிக்கியிருப்பதாகக் கூறி, அவரிடம் போனைக் கொடுக்கிறேன் என்பார். உடனடியாக அந்த செய்யறிவு குளோன் குரல் பேசும். அது பெரும்பாலும் அழுதுகொண்டே பேசுவதால் சந்தேகம் எழாது.
இதனால் யாருக்கும் சந்தேகம் வராது, நண்பரோ, உறவினரோ கைதாவதிலிருந்து தப்பிக்க பணம் அனுப்ப வேண்டும் என்றால் யார்தான் அனுப்ப மாட்டார்கள். பணம் வந்ததும், அந்த அழைப்பு துண்டிக்கப்படும். பிறகுதான், ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதையே அறிவர்.
சரி தப்பிக்க என்னதான் செய்ய வேண்டும்?
ஒருவர் அவசரத்தில் சிக்கியிருப்பதாக வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், உடனடியாக பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக தொலைபேசியில் அழையுங்கள்.
இரண்டாவது, இந்த குரல் பதிவு குளோனிங் என்பதால் அவ்வளவு சரியாக இருக்காது. ஒருவேளை நல்வாய்ப்பாக சந்தேகம் வந்தால், அவருடன் சற்று பொறுமையாக நீண்ட நேரம் பேச முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களுக்கு நிச்சயம் உண்மை தெரிய வரலாம். அதாவது குரல் சற்று இயந்திரத்தனமாக இருக்கலாம், ஒரே வாக்கியமாக இருக்கலாம், எனவே நன்கு கவனித்தால் மோசடியாளர்களை கண்டுபிடித்து விடலாம்.
இதுபோன்ற அழைப்புகள் வந்து எச்சரிக்கையாக இருந்துவிட்டால் மட்டும் போதாது, இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால் புகார் அளித்து மற்றவர்களையும் காப்பதும் நமது கடமைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.