

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதால், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கடலோர காவல்படை எச்சரித்துள்ளது.
உரிய நேரத்தில் எச்சரிக்கை அனுப்பி, தமிழகம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 985 மீன்பிடி படகுகளை ஏற்கனவே கரை திரும்ப வழியேற்படுத்தியிருப்பதாகவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கப்பல் மாலுமிகள் மற்றும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடலோர காவல்படையின் கிழக்குப் பகுதி கடலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்திகளை அனுப்பி அவர்கள் உடனடியாக கரை திரும்புவதற்கான விரிவான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
கடலில் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம், கடற்கரையோரங்களில் உள்ள ரேடார் நிலையங்களின் உதவியுடன், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், மீன்பிடி படகுகளுடன் விரைவில் அருகிலுள்ள துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அறிவுறுத்தி வருகிறது.
கடல் பகுதியில் உள்ள அனைத்து எண்ணெய் கிணறு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரையில் உள்ள கடற்படையினர் மற்றும் எண்ணெய் கிணறுகளில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடலோர காவல்படை விமானங்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தொடர் முயற்சியாக, தமிழகம், ஆந்திரம், புதுச்சேரியைச் சேர்ந்த 985 மீனவ படகுகள் பத்திரமாக கரை திரும்பியிருக்கின்றன. புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் வரவழைக்கப்படுவதாகவும், உயிர்ச் சேதமோ படகுகளுக்குச் சேதமோ ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.