நெல் கொள்முதல் விவகாரம்: இபிஎஸ் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

நெல் கொள்முதல் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
TN Chief Minister Stalin, EPS
முதல்வர் மு.க. ஸ்டாலின் |அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிIANS
Published on
Updated on
2 min read

நெல் கொள்முதல் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புயல் சின்னமும் பெருமழையும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களை அச்சுறுத்துகிற நிலையில், வடகிழக்குப் பருவகால இயற்கையின் தன்மையை உணர்ந்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உங்களில் ஒருவனான நான் -உங்களால் முதலமைச்சரான நான், எங்கெங்கு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நேரில் சென்று பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளைப் பணித்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரில் தொடங்கி, அத்தனை அமைச்சர்களும் களத்தில் மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தோழமை இயக்கத்தினர் என அனைவரும் முழு வீச்சுடன் செயலாற்றி வருகிறார்கள். வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது, பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் நிவாரணப்பணிகளை விரைந்து மேற்கொள்வது, நெல் சாகுபடி -கொள்முதல் ஆகியவை தடையின்றி நடைபெறுவது உள்ளிட்ட அனைத்திலும் நம் திராவிட மாடல் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இப்போதுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பருவமழைக் காலத்திலும் அரசியல் களத்தில் ஏதாவது அறுவடை செய்ய முடியுமா என்றுதான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ மக்களுக்கு உறுதுணையாக உண்மையாகவோ எதையும் செய்யும் எண்ணமில்லாமல் இருக்கிறார். நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சியினரும் சொன்னவையெல்லாம் புளுகு மூட்டைகள்தான் என்பதை திராவிட மாடல் அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்துவிட்டன. பொய்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டே இருப்போம்.

அத்துடன், ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது. S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பிகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.

S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.கழகத்திற்கு உண்டு.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த இயக்கம்தான் தி.மு.கழகம். நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, திமுக அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் என்னென்ன பயன்களைப் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகத்தையும் மீறி - மாநில அரசின் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றி - தமிழ்நாடு தலைகுனியாது என்பதை நிலைநாட்டி, மாநில உரிமைகளுக்காகப் போராடும் தி.மு.க. அரசு தொடர்ந்திட- மக்களின் ஆதரவைப் பெற்று, இரண்டரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்தவர்கள் திமுகவின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகள். களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து திமுகவினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான்.

என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு திமுக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கட்சி உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க வருகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

Summary

CM Stalin has responded to AIADMK General Secretary Edappadi Palaniswami's criticism on the paddy procurement issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com