

தினமும் 2 மணிநேரம் கூடுதலாகவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.
விவசாயிகளைப் பாதுகாப்பதில், அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதில் எப்பொழுதும் முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது.
ரூ.576.2 கோடியில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை - உழவர் நலத்துறை என பெயர் சூட்டி விவசாயிகளின் நலன்களுக்கு தனி முக்கியத்துவம் தந்தார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்தியதுடன் விவசாயப் பெருமக்களையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி வருகின்றார்கள். கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 68 ஆயிரத்து 919 விவசாயிகளுக்கு ரூ.576.20 கோடியில் வேளாண் இயந்திரங்களும், நவீன கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.98 கோடி மதிப்பில் 1,215 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறு விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
அதிகரித்த வேளாண் வளர்ச்சி
முதல்வர் ஸ்டாலினின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் 2012-2013 முதல் 2020-2021 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து மகத்தான சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசின் வேளாண்துறை.
நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் பணிகள்
தமிழ்நாட்டில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 24.10.2025 வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10.40 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதிதான் நெல் கொள்முதல் ஆரம்பிக்கப்பட்டது. முதல்வரின் உத்தரவுப்படி, இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில் நெல் விற்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே, செப்டம்பர் 1-ஆம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது.
மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் நெல்
தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெ.டன்களில் 8.77 இலட்சம் மெ.டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தில் 53,831 மெ.டன் நெல்லும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 23,125 மெ.டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 16,793 மெ.டன் நெல்லும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 21,537 மெ.டன் நெல்லும் நகர்வு செய்யப்படவேண்டும்.
21.10.2025-க்குப் பிறகு தஞ்சாவூரிலிருந்து தினமும் 4 இரயில்களும் (7,000 மெ.டன்), திருவாரூரிலிருந்து 5 இரயில்களும் (9,000 மெ.டன் முதல் 10,000 மெ.டன் வரை), மயிலாடுதுறையிலிருந்து 2 இரயில்களும் (4,000 மெ.டன்), நாகப்பட்டினத்திலிருந்து 1 இரயிலும் (2,000 மெ.டன்) இயக்கப்பட திட்டமிடப்பட்டு நகர்வு செய்யப்படுகிறது.
திருவாரூரிலிந்து மட்டும் 48,000 மெ.டன் நகர்வு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
தினமும் நெல் கொள்முதல் நடைபெறுகிறது
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிக கொள்முதல் நடைபெறும் 13 மாவட்டங்களில் கூடுதலாக 127 POP இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 மண்டல மேலாளர்கள் குழு ஒரு கூடுதல் பதிவாளர் ஆகியோர் கடந்த 10 நாள்களாக பணியாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.