

உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும்! கொஞ்சம் அசந்தாலும், 'அவுட்டேட்' ஆகிவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 27) சென்னை, மியூசிக் அகாதெமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
”உங்கள் கையில் இருக்கும் ‘டிகிரி(degree)’ என்பது வெறும் பேப்பர் இல்லை! உங்களுடைய உழைப்பின் விளைச்சல்! உங்கள் அறிவுக்கான - திறமைக்கான அங்கீகாரம்! இந்த நாள் உங்கள் குடும்பத்தின் பல தலைமுறை கண்ட கனவு, மெய்ப்படக்கூடிய நாளாக அமைந்திருக்கிறது! மதிப்புமிக்க பாரதிதாசன் கல்வி நிறுவனத்திலிருந்து நீங்கள் டிகிரி பெற்று இருக்கிறீர்கள்!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் மேலாண்மை பள்ளியாக ‘பெல்’ வளாகத்தில் நிறுவப்பட்ட பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது. மேனேஜ்மெண்ட் சார்ந்த கல்வித் துறையில், இந்திய அளவில், தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. இங்கு படித்த உங்களுடைய சீனியர்ஸ் எல்லாம், இப்போது, பல தொழில் நிறுவனங்களில், கல்வி மற்றும் சமூக துறைகளில் Top Position-ல் இருக்கிறார்கள்! அந்த List-ல் உங்கள் பெயரும் இடம்பெற வேண்டும். ஏன் நீங்கள் உருவாக்குகின்ற நிறுவனம் அந்த டாப் லிஸ்டில் வரவேண்டும்.
உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும்! கொஞ்சம் அசந்தாலும், 'Outdate' ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள்.
அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது! அவர்கள் உருவாக்கும் பாசிட்டிவ் தாக்கம்தான்! இந்த ஏ.ஐ. காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும்! வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம்! எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில பேசிஸ் எப்போதும் மாறாது! அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்!
இதற்காக பெரிய பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்க வேண்டும் என்று இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும் அடிப்படையான மேனேஜ்மெண்ட் பாடங்கள் நம்முடைய திருக்குறளிலேயே நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால், அடுத்து நடக்கப் போவதை கணிக்கிறவர்கள்தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும். அதைத்தான் “அறிவுடையார் ஆவது அறிவார்” என்று வள்ளுவர் சொல்கிறார். அந்த திறன் இல்லாதவர்கள் எதிர்பாராத ஒரு இடைஞ்சலுக்கே நம்பிக்கை இழந்து முடங்கிவிடுவார்கள்.
சாதக பாதகங்களை யோசிக்காமல், ‘Proper Planning’ இல்லாமல், எதிலும் இறங்க கூடாது என்பதை, “எண்ணித் துணிக கருமம்” என்று சொல்லி, வள்ளுவர் ‘வார்னிங் கொடுக்கிறார். எவ்வளவு நல்ல ஐடியாவாக இருந்தாலும், ‘டைமிங்’ மிகவும் முக்கியம்! அதைத்தான் “காலம் அறிந்து கடிது செயல்வேண்டும்” என்று சொல்கிறார். அப்படி செயல்பட்டால் உலகத்தையே கூட வெல்லலாம்! சரியான ஆள்களை வைத்தால்தான், எந்த வேலையும் சரியாக நடக்கும் என்பதை, “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்ற குறளில் சொல்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேல், நாம் செய்யும் எந்த செயலிலும் அறம், வாய்மையை தவறவிடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறார்” என்று பேசினார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஊழலை ஒழிக்க பிஎம்டபிள்யூ கார்கள் தேவையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.