சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!

லோக்பால் உறுப்பினர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்கள் வாங்கும் சர்ச்சையுடன், பரவியுள்ள ஊழலை ஒழிப்பதற்கான தேவையும் பற்றி...
lokpal and BMW cars
உழலும் ஊழல்...Photo Courtesy: BMW website
Published on
Updated on
5 min read

ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பான லோக்பாலில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்காக தலா ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 7 பிஎம்டபிள்யூ கார்களை வாங்க டெண்டர் விடுக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் எழுப்பியிருக்கிறது.

ஊழலுக்கு எதிரான ஓர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மிகவும் ஆடம்பரமான பிஎம்டபிள்யூ கார்கள் தேவைதானா? இவர்கள் வாங்கவிருக்கும் கார்களின் மதிப்பு மொத்தமாக சுமார் ரூ. 5 கோடி இருக்கும். பிஎம்டபிள்யூ 3 வரிசை 330எல்ஐ - எம் ஸ்போர்ட் - லாங்வீல் பேஸ் – கார்கள் வாங்க அழைப்பு விடுத்திருக்கிறது லோக்பால்.

லோக்பால் விசாரணை அமைப்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையில் ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் உள்பட 6 பேர் இடம் பெற்றிருக்கின்றனர்.

பிஎம்டபிள்யூ கார்கள் வாங்குவது தொடர்பான செய்திகள் வெளியானது தொடங்கி, லோக்பாலின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் அலசப்படுவதுடன், உருவாக்கப்பட்ட காலந்தொட்டு லோக்பால் என்ன வேலைகளைச் செய்து வந்திருக்கிறது என்ற ஆராய்ச்சியெல்லாமும் சேர்ந்துகொண்டுவிட்டது.

ஊழலுக்கு எதிரான விசாரணை அமைப்பு பற்றி 1960-களிலேயே விவாதிக்கப்பட்டு,  நாடாளுமன்ற அவைகளில் மீண்டும் மீண்டும் எத்தனையோ முறை முன்வரைவுகள் கொண்டுவரப்பட்ட போதிலும் நிறைவேற்றப்படாமலே சென்றுகொண்டிருந்தது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் – 2010-இல் - ஊழலை ஒழிப்பதற்காகவும் லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டே தீர வேண்டும் என வலியுறுத்தியும் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜரிவால் போன்றோர் எல்லாம் இணைந்து உண்ணாவிரதம் முதலானவற்றை மேற்கொண்டனர்; அப்போது அவர்கள் சொன்ன அரசியல் சாசன அதிகாரம் கொண்ட லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வேண்டும். ஆனால், ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிடம் இல்லை. ஆனாலும் தெரிந்தே போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2011-இல் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், வலுவற்றதென ஹசாரே குழுவினர் குற்றம் சாட்டினர். பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக, 2 ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி ஊழல் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. கடைசியாக, இந்தப் பிரசாரத்தின் பலனாக, 2014-ல் காங்கிரஸ் தோற்றும்போனது. பாரதிய ஜனதா ஆட்சிக்கும் வந்தது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோதிலும், 2013-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் தொடர்ச்சியாக, 2019 மார்ச்சில்தான் லோக்பாலுக்குத் தலைவரும் தொடர்ந்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

‘வல்லமை மிக்க’ இந்த லோக்பால்தான் இப்போது பிஎம்டபிள்யூ கார்களில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. இதுபற்றி இதுவரையிலும் ஹசாரே உள்பட ‘லோக்பால் போராளிகள்’ தரப்பிலிருந்து எவ்வித எதிர்வினைகளும் எழுந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், இவ்வளவு பரபரப்பான போராட்டங்களுக்குப் பிறகு (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததென்றுகூட கூறலாம்) உருவான இந்த லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள்தான் என்னவாக இருந்துவந்திருக்கின்றன என்பதெல்லாமும்தான் இப்போது பிஎம்டபிள்யூ கார்களுடன் சேர்த்து நாடு முழுவதும் அலசித் தொங்கவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

லோக்பால் அமைப்பு தன்னிடம் வரும் 90 சதவிகித ஊழல் புகார்களைக் குறிப்பிட்ட முறைப்படி இல்லை என நிராகரித்துவிடுகிறது. ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட 8,703 புகார்களில் 24 மீதுதான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது; ஆறே ஆறு புகார்களில்தான் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கிறது; விசாரணைக்குப் பின் தண்டனை எதுவும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தொடங்கிய காலந்தொட்டு இதுவரையிலும் லோக்பால் விசாரித்த அல்லது அனுமதித்த எந்தவொரு வழக்கிலும் எவரொருவரும் ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் எதுவும் இல்லை.

லோக்பாலின் வேலை என்பது, ஊழல் குற்றச்சாட்டுகளை / புகார்களை புலனாய்வு  / விசாரணை செய்யும்; (பெரும்பாலும் சி.பி.ஐ.) விசாரணைக்குப் பரிந்துரைக்கும், வழக்குத் தொடர அனுமதியளிக்கும். ஆனால், தண்டனை விதிப்பதெல்லாம் வழக்கமான நீதிமன்றங்களில்தான், நீதிமன்ற நடைமுறைகளின்படிதான். ஆக, வழக்கம்போல ஆண்டுக்கணக்கில் வழக்கு விசாரணை இழுபட்டுக்கொண்டிருக்கும்!

அல்லது, இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். புகாரும் வரவில்லை, வந்த புகார்கள் ஏற்கும்படியாகவும் இல்லை, விசாரிக்கவும் இல்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை; என்றால் நாட்டில் ஊழலே நடக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாமா? (2024-25 நிதியாண்டில் நவ. 24 வரையில் பெறப்பட்ட 210 புகார்களில் 158 (68%) நிராகரிக்கப்பட்டன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது). ஒருவேளை லோக்பால் வேண்டுமானால் அப்படி நினைத்துக்கொண்டிருக்கக் கூடும்!

லோக்பால் செயல்படத் தொடங்கியதே கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்தான். தில்லி சாணக்கியபுரியிலுள்ள அசோக் ஹோட்டல் என்ற ஐந்து நட்சத்திர விடுதியில்தான் அலுவலகம். 2020-ல் அரசு கட்டடத்துக்கு இடம் மாறும் வரையிலும் மாதம் ரூ. 50 லட்சம் வாடகை. 2019 மார்ச் 22 முதல் அக். 31 வரை மட்டும் வாடகையாகச் செலுத்தப்பட்ட தொகை ரூ. 3.8 கோடி!

லோக்பாலுக்கான செலவு பற்றி ‘க்ரோக்’கில் தோராயமாக ஒரு கணக்குக் கேட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு ஊதியம் மற்றும் பணிப் பயன்களுக்கு ரூ. 25 கோடியிலிருந்து 28 கோடி வரை, ‘செயல்படுவதற்காக’ ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை, ஆக, ரூ. 30 கோடியிலிருந்து 38 கோடி வரை – ஆறு ஆண்டுகளில் ரூ. 180 கோடியிலிருந்து ரூ. 228 கோடி வரை.

போகாத ஊருக்கு வழி சொல்வதற்கு இவ்வளவு செலவா? இருக்கட்டுமே.  அதனாலென்ன, இதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்காக அதிகாரப்பூர்வமான ஓர் அமைப்பை நாம் வைத்திருக்கிறோம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது அல்லவா? அண்ணா ஹசாரேவும் போராட மாட்டார் (அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுத் தலைவர்களானவர்கள் எல்லாரும் ஏற்கெனவே  பிய்த்துக்கொண்டு வெவ்வேறு முகாம்களுக்குச் சென்றுவிட்டனர்!).

உள்ளபடியே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மெர்சிடஸ் பென்ஸ் காரும் பணியிலுள்ள பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பிஎம்டபிள்யூ 3 வரிசை கார்களும் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான், நாங்களும் நீதிபதிகள் / மாதிரிதானே, நாங்கள் மட்டும் பிஎம்டபிள்யூ கார்களில் செல்லக் கூடாதா? என லோக்பால் உறுப்பினர்களும் பிஎம்டபிள்யூவுக்குத் தாவுகின்றனர் (தற்போது தலைவர், ஸ்கோடா சூப்பர்ப் காரும் உறுப்பினர்கள், டொயோட்டா கரோல்லா ஆல்ட்டிஸ் கார்களும் பயன்படுத்துகின்றனர்).

இவற்றையெல்லாம் ‘முற்றிலும் தேவையற்ற, அநாவசியமான சர்ச்சை’ என்று குறிப்பிட்டிருக்கிற லோக்பால் வட்டாரங்களோ, 2013 லோக்பால் மற்றும் லோக்ஆயுக்த சட்டத்தின் வழிவகைப்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையாக லோக்பால் தலைவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக உறுப்பினர்களும் ஊதிய, பணிப்பயன்களைப் பெறுவார்கள்; அதன்படியே, இப்போது பிஎம்டபிள்யூ கார்களை வாங்கவிருக்கின்றனர் என்கின்றன.

லோக்பால் அமைப்பில் இப்போது இருப்பவர்கள் யார்? இவர்களைத் தெரிந்துகொண்டே ஆக வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் யார்தான் இந்த பிஎம்டபிள்யூக்களில் செல்லப் போகிறார்கள், பார்க்கலாமே என்று நினைத்தால்... நீதிபதி அஜய் மாணிக்ராவ் கன்வில்கர் (தலைவர்), உறுப்பினர்கள் – நீதிபதி லிங்கப்பா நாராயணசாமி, நீதிபதி சஞ்சய் யாதவ், சுசீல் சந்திரா, நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, பங்கஜ் குமார், அஜய் திர்கி.

ஊழலை ஒழிக்கும் அரசுப் பணி அல்லது மக்கள் பணி என்று எடுத்துக்கொண்டால் எதற்காக இவ்வளவு ஆடம்பரம் அல்லது பகட்டுச் செலவு? லோக்பால் அல்லவா, எளிமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்தானே? என்றெல்லாம் சாதாரணர்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.

போகட்டும். தற்போது லோக்பால் ஆண்டுச் செலவு ரூ. 44.32 கோடி என்று கூறப்படுகிறது. வெறும் ரூ. 5 கோடிக்குத் தங்களுக்குப் பிடித்த / அல்லது அனுமதிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களை இவர்கள் வாங்கப் போகிறார்கள். இந்தத் தொகையானது, ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 10 சதவிகிதம்தான். போயும் போயும் இந்தச் செலவால் என்ன பெரிதாக / புதிதாகக் கெட்டுவிடப் போகிறது? இவ்வளவு பெரிய நாட்டின் ஊழலை ஒழிக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கிற அமைப்பின் உறுப்பினர்கள் இதைக்கூட அனுபவிக்கக் கூடாதா? விடுங்கள்.

லோக்பால் உறுப்பினர்களாக இருக்கும் வரைதான் இவர்களுக்கு பிஎம்டபிள்யூ. பிறகு வழக்கம்போல வழக்கமான கார்களுக்குத் திரும்பிவிடப் போகிறார்கள். ஆனால், இப்போது நாடு தழுவிப் பரந்திருக்கும் ஊழல்களையெல்லாம் யார், எப்போது, எப்படி  ஒழிக்கப் போகிறார்கள்? (கிஞ்சித்தும் ஊழலே இல்லை, நாடு முழுவதும் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறவர்கள் இதுபற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை!).

இந்தியாவில் மத்தியிலும் மாநிலங்களிலும் ஊழலற்ற அமைச்சர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள்? இவர்களை எல்லாம் யார் மதிப்பிடுவது? எவ்வாறு மதிப்பிடுவது? ஏதாவது ஒரு கட்சியில் அல்லது கூட்டணியில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அரசியல்வாதிகள் செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் எல்லாம் எரிந்து பஸ்பமாகி மறைந்து விடுமா?

ஒரு சாதாரண (தப்பு தப்பு, கன்னத்தில் போட்டுக் கொள்ளவும். அப்படியெல்லாம் சாதாரண என்று கூறிவிடக் கூடாது) கவுன்சிலர் -  மாநகராட்சியோ, நகராட்சியோ, பேரூராட்சியோ, ஊராட்சியோ - தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவிக்கு வரும்போது எவ்வளவு சொத்துகள் வைத்திருந்தார்? பதவிக் காலம் முடியும்போது எவ்வளவு சொத்துகள் வைத்திருக்கிறார்? கூடவே, என்ன கார் வைத்திருந்தார்? வைத்திருந்தாரா? இப்போது என்ன கார் வைத்திருக்கிறார்? இவையெல்லாம் எப்படி சாத்தியப்படுகின்றன? எல்லாம் ஊழலற்ற, நேர்மையான வருவாயின் மூலம் மட்டும்தானா? ஏன் நம்மில் யாருக்குமே எதுவுமே தோன்றுவது இல்லை? (அது சரி, ஒரு வார்டு தேர்தல் என்றாலும் பணமில்லாமல் வெல்ல முடியுமா?).

அரசியலில் தொடங்கி, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு, பொதுத் துறை ஊழியர்கள் என விலாவரியாக இப்படியொரு கணக்கைப் பார்க்க முயன்றால் நாட்டில் ஊருக்கொரு அல்லது வீதிக்கொரு லோக்பால்கூட தேவைப்படலாம். ஆனால், இவற்றுக்காகவெல்லாம் இப்போது யாரும் கோபப்படுவதும் இல்லை; சீற்றம் கொள்வதுமில்லை. மாறாக, கெட்டிக்காரன், ஒரே ஒரு பீரியட்தான். வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டான் என்று பாராட்டக்கூட செய்கிறார்கள். எல்லாம் காசு, பணம், துட்டு, மணி!

எங்கேயிருந்தாலும் எப்படியிருந்தாலும் ஊழலையும்கூட இயல்பானதாக மக்கள்  செரிக்கப் பழகிவிட்டார்கள். ஆனால், பேசும்போது மட்டும் – அரசியல் தலைவர்களில் தொடங்கி அடிமட்டம் வரையிலும் - ஒவ்வொருவரிடமும் சொல்லில் எவ்வளவு நேர்மை, நியாயம் வழிந்து பெருகுகிறது? ஆனால், செயலில்? ஒன்றுகலந்துவிட்ட அரசியலும் அதிகாரமும் ஊழலும் பணமும் எப்போது பிரியப் போகின்றன? நாடு முழுவதும் என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றன? பட்டியலிடத் தொடங்கினால் மனப்பிறழ்வு நிச்சயம். இப்படியாகப்பட்ட ‘பெருமிதமான’ ஒரு சூழலில் போயும் போயும் லோக்பால் வாங்கவுள்ள இந்த பிஎம்டபிள்யூ கார்களால்தான் எல்லாம் கெட்டுவிடப் போகின்றனவா, என்ன?

ஆனாலும், இந்தப் பரபரப்பில் பாசிட்டிவ்வாகவும் ஒன்றிருக்கிறது. ஊழலை ஒழிக்க லோக்பால் என்றோர் அமைப்பு இருக்கிறது என்பதும் அந்த லோக்பால் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது, என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதெல்லாமும் பரவலாக மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. கூடவே, ஊழலைப் பற்றியெல்லாமும் ஒருமுறை பேச வைத்திருக்கிறது. தேங்க்ஸ், பிஎம்டபிள்யூ!

தொடர்பில்லாத சில துணுக்குகள்

ரூ. 34 ஆயிரம் கோடி!

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காகப் பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷனிலிருந்து (எல்ஐசி) 3.9 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 34 ஆயிரம் கோடி) தொகையை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு மடைமாற்றிவிட்டதாக ஆவணங்களுடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வாஷிங்டன் போஸ்ட். அதானி குழுமம் உடனடியாக இதை மறுத்திருக்கிறது; எல்ஐசியும் மறுத்திருக்கிறது, ஆனால், ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்தக் கடிதத்தில் கையொப்பம் எதுவுமில்லை, தொடர்பு வரிசை எண் இல்லை, தேதியில்லை, முத்திரையுமில்லை – கிட்டத்தட்ட எல்ஐசி லெட்டர்ஹெட்டில் அச்சிடப்பட்ட மொட்டக் கடிதாசி?

இதனிடையே, 2014-ல் ரூ. 1.50 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் செல்வம் 2024-ல் ரூ. 9.50 லட்சம் கோடியாகவும் 2014-ல் ரூ. 57 ஆயிரம் கோடியாக இருந்த கௌதம் அதானியின் செல்வம் 2024-ல் ரூ. 9.30 லட்சம் கோடியாகவும் உயர்ந்திருக்கிறது என்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ), இந்தியாவின் பட்டினிக் குறியீட்டெண் 2014-ல் 55 ஆக இருந்தது, 2024-ல் 102 ஆகத் தாழ்ந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

புதுக் கணக்கு!

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமது கடற்படையில் ஒவ்வொரு நாற்பது நாள்களுக்கும் ஒரு போர்க் கப்பலோ, நீர்மூழ்கிக் கப்பலோ இணைக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் பதவியேற்று 4,168 நாள்கள். 40 நாள்களுக்கு ஒன்றென்றால் 104! ஆனால், நம் கடற்படையில் இருப்பது சுமார் 140 கப்பல்கள். இவற்றில் 2014-க்குப் பிறகு இணைக்கப்பட்டவை 40!

ரூ. 8.90 கோடி!

ரியோ டி ஜெனிரோவில் 2025, ஜூலை 6-ல் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றுவந்த செலவு விவரம் (ஆர்டிஐ அளித்த தகவலின்படி): ஹோட்டல் ஏற்பாடுகள் – ரூ. 3.04 கோடி, வளாகச் செலவுகள் – ரூ. 57 லட்சம், போக்குவரத்து – ரூ. 1.89 கோடி, பிற செலவுகள் – ரூ. 3.39 கோடி, மொத்தம் – ரூ. 8.90 கோடி!

வல்லுறவுகள்!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2014 மே முதல் 2023 டிசம்பர் வரையில் – சுமார் 3,530 நாள்கள் - பதிவு செய்யப்பட்ட(வை மட்டும்) வல்லுறவு வழக்குகள் – 3,05,945. சராசரியாக ஒரு நாளில் 86!

வாழ்க நிர்பயா!

Summary

On the controversy over purchasing BMW cars for Lokpal members and the need to eradicate widespread corruption...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com