சொல்லப் போனால்... ஒரே சட்டம்தான், ஆனால்...

கரூர் நெரிசல் பலி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் பின்னணி பற்றி...
The background behind the Supreme Court's order for a CBI investigation into the Karur stampede deaths...
யார்தான் காரணம்?சித்திரிப்பு: விஜய்
Published on
Updated on
5 min read

கரூரில் நடிகர் / த.வெ.க. தலைவர் விஜய் கூட்டத்துக்கு வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரைப் புதைத்த இடங்களில் புல் முளைத்துவிட்டிருக்கும். ஆம், மூன்று வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்னமும் இதுதொடர்பான ‘உள்குத்து - வெளிக்குத்து அரசியல்’ மட்டும் முடிவுக்கு வரவில்லை!

இந்திய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் இத்தனை உயிரிழப்புகள் நேர்ந்த சில மணி நேரங்களிலேயே யார் காரணம்? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன; காவல்துறை விசாரணையும்.

தமிழ்நாடு அரசின் காவல்துறை விசாரிப்பதில் நம்பிக்கையில்லை; மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் மதுரை அமர்வில் ஒருவர் வழக்குத் தொடுக்கிறார். விசாரணை தொடக்க நிலையில் இருக்கிறது; அதற்குள் எவ்வாறு விசாரணையில் நம்பிக்கையிழந்தீர்கள்? தவிர, சம்பவத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வியெழுப்பித் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

அதேநேரத்தில், (கரூர்ப் பலியை முன்வைத்து) கூட்டத்தைக் கையாள்வதற்கான  வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றொரு மனுவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வருகிறது (கரூர், மதுரை எல்லைக்குள் வருவதால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை அணுகச் சொல்லியிருக்க வேண்டுமாம்). நெரிசல் கால சிறப்பு செயல்பாடுகளை வரையறுப்பது தொடர்பான வழக்கு என்றாலும், மனுவில் கரூர் பலி பற்றிய முதல் தகவல் அறிக்கையில் விஜய் பற்றிக் குறிப்பிடவில்லை; விஜய் மீது எப்ஐஆர் இல்லை என்றெல்லாமும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், வழக்கின் முதன்மையான வேண்டுதலுக்கு வெளியே, கரூர்ப் பலி தொடர்பான விஜய்யின் செயல்பாடுகள் பற்றி சில கருத்துகளை (மக்களும் சமூக ஊடகங்களிலும் பேசி விவாதித்துக் கொண்டிருந்தவைதான்) தெரிவித்ததுடன், கரூர்ப் பலி பற்றி விசாரிக்கக் காவல்துறை உயர் அலுவலர் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றையும் அமைத்தார் (இதற்கு முன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் முழுமையான நீதி கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்கள் இப்படிச் செய்திருக்கின்றன என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன). காவல்துறையிடமிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனைத்தும் மாற்றப்பட விசாரணையும் தொடங்கிவிடுகிறது.

இதனிடையேதான், உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக, சுதந்திரமான விசாரணை கோரி விஜய்யின் த.வெ.க. சார்பிலும் மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அக். 10 வெள்ளிக்கிழமை, விசாரணைக்கு வருகின்றன.

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மதுரை எல்லைக்குள் வரும் விஷயத்தை சென்னை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது ஏன்? சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது ஏன்? என்பன உள்பட பல கேள்விகளை எழுப்பியதுடன் உத்தரவை ஒத்திவைத்தது. தொடர்ந்து, அக். 13 ஆம் தேதி திங்கள்கிழமை, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பில் மத்திய புலனாய்வுக் குழு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகியவற்றையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

கூடவே, இதுவரை கேள்விப்படாத புதுமையாக, நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவில் இடம் பெறும் இரு காவல்துறை உயர் அலுவலர்களும் தமிழக பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக (தமிழர்களாக?) இருக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்திருக்கிறது. இந்தக் குழு, விசாரணையைக் கண்காணிக்கும், சாட்சியங்களை பரிசீலிக்கும், தொடர்புடைய விவரங்களை விசாரிக்கலாம், எவ்வாறு என்பதை நீதிபதியே வடிவமைத்துக் கொள்ளலாம் என்று செல்கிறது நீதிமன்ற யோசனைகள். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழுவின் முன் எதற்காக மத்திய புலனாய்வுக் குழு நிற்க வேண்டும்?

ம். மத்திய புலனாய்வுக் குழுவினரும் தற்போது கரூருக்கு வந்து விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.

கரூர்ப் பலி தொடர்பாக, நீதிமன்றங்களிலும் நீதிமன்றங்களுக்கு வெளியேயும் இதுவரை நடந்துகொண்டிருப்பவை எல்லாவற்றையும் பார்க்க, இந்த நாட்டின் அரசியல் ஏதுமறியாத எளிய குடிமகனைப் பொருத்தவரை மிஞ்சுவது என்னவோ  பெரிய குழப்பம்தான்.

மத்திய புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கரூர்ப் பலி தொடர்பாக, தமிழ்நாடு அரசு / காவல் உயர் அலுவலர்கள் ஊடகங்களில் தெரிவித்த கருத்துகள், தொடர்பான அலுவலர்களைப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதாக இருப்பதாகவும் இதனால் பாரபட்சமற்ற விசாரணை தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், உள்ளபடியே சம்பவத்துடன் வெளியேறிப் போன விஜய், பிறகு வெளியே தோன்றவேயில்லை. இரங்கல்கூடத் தெரிவிக்கவில்லை. அவருடைய கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் எனக் கூறப்படுகிற பலரும் காணப்படவில்லை (தலைமறைவாகிவிட்டதாகக் கூறலாமா?). ஆனால், சமூக ஊடகங்களில் முனைப்பாக ஏராளமான, அவருடைய ரசிகர்களைத் தவிர வேறு யாராலும் நம்ப முடியாத, ‘சதிக் கோட்பாடுகள்’ பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில்தான் ஊடகங்களைச் சந்தித்து நடந்தவற்றை அரசு அலுவலர்கள் விவரித்தனர். இதனாலேயே, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறாது என்று கொள்ள முடியுமா? - தெரியவில்லை.

உச்ச நீதிமன்ற சொற்களின்படி, ‘தேசிய அளவில் மக்களின் மனசாட்சியை உலுக்கிய ஒரு சம்பவத்தில்’, மோசமான சதிக் கோட்பாடுகள் பரப்பப்படும் சூழலில், கரூரில் நடந்தவற்றை ஊடகங்களின்வழி அரசு நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு அதிகாரிகள் விளக்குவது என்பது குற்றமாகிவிடுமா? விசாரணையைப் பாதிக்குமா? எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும், மக்களுக்கு எவ்விதத் தெளிவும் கிடைக்கப் பெறாத நிலையில், அமைதியாக இருப்பதுதான் நடுநிலையா?

“பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணைக்காக இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஏதோவொரு காலத்தில் (மம்மூட்டி நடித்து மலையாளத்தில்கூட ஒரு படம் வந்ததே!) சிபிஐ விசாரணை தொடர்பாக இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் இருந்திருக்கலாம். ஆனால், சிபிஐயின் இன்றைய நிலைமைக்கும் செயல்பாட்டுக்கும்  எடுத்துக்காட்டுகளாக எத்தனையோ வழக்குகளை, சம்பவங்களைச் சொல்ல முடியும்.

(கரூர்ப் பலி சம்பவத்துக்குப் பிறகு வெளியே எங்கேயும் தென்படாத, பிணை கேட்டு நீதிமன்றங்களுக்குச் சென்றுகொண்டிருந்த, தவெகவின் உயர் தலைவர்கள், சிபிஐ விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் தாராளமாக வெளியே வருவதற்கும் இந்த பாரபட்சமற்ற சுதந்திர விசாரணைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காதென நம்பலாம்).

தவிர, கரூர்ப் பலி சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்திருந்த ஒருநபர் விசாரணை ஆணையத்தையும் ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். முற்றிலும் வேறுபட்டதான, அரசு அமைத்த விசாரணை ஆணையம், இந்த வழக்கின் விசாரணை வரம்புக்குள் வருமா? என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது, காவல்துறையினரால் ஒன்றுமறியா பொதுமக்களில் 13 பேர் ‘திட்டமிட்டு’ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் எண்ணற்ற உண்மைகளை இதே நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம்தான் வெளிப்படுத்தியதே தவிர, ‘பாரபட்சமற்ற சுதந்திர விசாரணை புகழ் சிபிஐ அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது (தவறிழைத்தவர்களுக்கு எதிராக ஆணையம் பரிந்துரைத்த நடவடிக்கைகளில் பல இன்னும் செயற்படுத்தப்படவில்லை என்பது வேறு விஷயம்). இதே சிபிஐயை ‘மத்திய அரசின்  கூண்டுக்கிளி’ என்பதாக உச்ச நீதிமன்றமேகூட ஒருமுறை வர்ணித்திருக்கிறது!

கரூரில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது பற்றிக்கூட நீதிமன்றத்தில்  கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இரவோடு இரவாகக் கூராய்வு செய்து முடிக்கப்படவில்லை; அப்படியே செய்திருந்தாலும் தவறில்லை. மறுநாள் மாலை 4 மணிக்குதான் கடைசி உடல் கூராய்வு முடித்து வழங்கப்பட்டது என்பதுடன் எவ்வாறு மருத்துவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாமும் அரசுத் தரப்பில் ஏற்கெனவே பொதுவெளியில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா? தெரியவில்லை.

“அரசின் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் மீதும் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீதும் நம்பிக்கை இல்லை; சிபிஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்” என்று நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒரு சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது. விசாரணை தொடக்க நிலையில் இருக்கும்போதே எவ்வாறு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள்? என்று சிபிஐ விசாரணையை மறுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு எழுப்பிய கேள்வி இங்கேயும்கூட பொருத்தமானதாகவே இருந்திருக்க வேண்டும்.

இவற்றுக்கு இடையே இந்த வழக்கிலும் தொடர்பான உத்தரவின் செயற்பாட்டிலும்  இன்னொரு பெரும் சிக்கல் அல்லது புதிரும் இருக்கிறது - பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் மனு தாக்கல் செய்த இருவர் தொடர்பான நம்பகத் தன்மை!

வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான (உயிரிழந்த சந்திரா என்ற பெண்ணுடைய கணவரான) செல்வராஜ் என்பவர், தனக்கு இந்த வழக்கு பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது, குறிப்பிட்ட வழக்குரைஞரையும் தெரியாது. மகனுக்கு வேலை வாங்கித் தருவதற்காக என்று தெரிவித்து உள்ளூர்க் கட்சிக்காரர் ஒருவர்தான் வெற்றுத்தாளில் என்னிடம் கையெழுத்துப் பெற்றுச் சென்றார்; எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்று விடியோ பேட்டியொன்றில் மறுத்திருக்கிறார்.

இன்னொரு தரப்பு பிரச்சினை இன்னமும் வினோதம். இறந்த சிறுவனின் அப்பா என்று கூறிக்கொண்டு வழக்குத் தொடுத்துள்ள பன்னீர்செல்வம் என்பவருக்கு,  குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு மனைவியுடனோ, குழந்தையுடனோ எவ்விதத் தொடர்புமில்லை (இறந்துவிட்ட 9 வயது மகனுக்குப் 13 வயது என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம்!). இன்னொரு திருமணம் செய்துகொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒற்றைப் பெற்றோர் என்ற சான்றிதழும் பெற்று மகனை வளர்த்துக்கொண்டிருந்திருக்கிறார் பன்னீர்செல்வத்தால் கைவிடப்பட்ட மனைவியான சிறுவனின் தாய் சர்மிளா. சர்மிளா, அவருடைய தாய், சகோதரன் என எல்லாரிடமும் விடியோ பேட்டியெடுத்து யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்டது. அக். 9 ஆம் தேதி மாலையிலிருந்து இரண்டு விடியோக்களுமே வைரலாகத் தொடங்கின.

தொடர்ந்து இந்தத் தகவல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அக். 13-ல் நீதிமன்றத்திலும் எழுப்பப்பட்டது. எனினும், இவற்றைப் பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம்  தெரிவித்துவிட்டது. இவை நிரூபிக்கப்படும்போது, நீதிமன்றத்தை ஏமாற்றிய மோசடிக் குற்றத்தின் கீழ் வரும். இந்தக் குற்றச்சாட்டில் யார் யார் எல்லாம் சிக்குவார்கள் என்று தெரியவில்லை. செல்வராஜுக்கு எதுவும் தெரியாத நிலையில் செல்வராஜ் பெயரைச் சொல்லிக்கொண்டு செயல்படுபவர்கள் யார்? இவர்களுக்காக வாதாடும் வழக்குரைஞர்களுக்கும் இன்ன பிற விஷயங்களுக்கும் லட்சங்களில் செலவழித்துக்கொண்டிருப்பது யார்? பன்னீர்செல்வம் விஷயத்திலும் இவை பொருந்தும். இவர்களை இயக்குவது யார்? என்றால், இவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சி.பி.ஐ. விசாரணை, கண்காணிப்புக் குழுவெல்லாம் என்னவாகும்? சிபிஐ விசாரணையிலிருந்து தமிழ்நாடு அரசு விசாரணைக்கு மறுபடியும் மாற்ற முடியுமா?  ஏனெனில், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ‘இடைக்கால நிவாரணமாக / ஏற்பாடாக’வே உத்தரவு பிறப்பித்திருக்கிறது நீதிமன்றம். இவையெல்லாம் எப்போது மீண்டும் விசாரணைக்கு வரப் போகின்றன? உண்மை வெளிவரும்போது நிலைமை என்னவாகும்?

உள்ளபடியே, நம்முடைய நீதிமன்றங்களில் இந்த சிபிஐ விசாரணைகள் படும் பாடுகளைச் சொல்லி மாளாது.

சில நாள்களுக்கு முன், உத்தரப்  பிரதேச சட்டப்பேரவை பணியாளர்கள் ஆளெடுப்பில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், கடைசிப் புகலிடமாகத்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது – இந்த அமர்விலிருந்த நீதிபதிகளில் (கரூர்ப் பலி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட) நீதிபதி ஜே.கே. மகேஸ்வரியும் ஒருவர்!

போகட்டும். கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததில் மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் 21 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த மருந்தைத் தயாரித்து விநியோகித்த நிறுவனம் தமிழ்நாட்டில் இருக்கிறது. நாட்டின் பல மாநிலங்களுக்கும் இந்த இருமல் மருந்து விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இதுவரை வேறு எத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? இன்னமும் எங்கே, என்ன நடந்துகொண்டிருக்கிறது? இவற்றில் விசாரிக்க சிக்கலான நிறைய விஷயங்கள் இருக்கின்றன; ஆனால், பல மாநிலங்களும் பல மாநில அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற வேண்டுதலை நிராகரித்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதுவரை நாடு முழுவதும் எத்தனை நெரிசல் பலிகள் நேரிட்டிருக்கின்றன? எத்தனை சம்பவங்களில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது? உ.பி.யில் ஹத்ராஸில் ஆன்மிகச் சொற்பொழிவுக் கூட்டமொன்றில் நேரிட்ட நெரிசலில் 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். யார் விசாரணை? என்ன முடிவு? நெரிசல் பலி என்றால் நீண்டுகொண்டேதான் செல்லும்! கும்பமேளாவில் நெரிசலில் சிக்கி எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை; தெரிவிக்கப்படவில்லை.

கரூர்ப் பலி விஷயத்தில் ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைப் பெற வேண்டும்; சிபிஐ விசாரணைக்கு மாற்றிவிட வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடுக்கப்பட்டதா? அவ்வாறு தொடுக்கப்பட்டிருந்தாலும், எல்லாம் தொடக்க நிலையில் இருக்கும்போது,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வுக்கேகூட அனுப்பியிருக்கலாமோ? நீதிபரிபாலனம் எப்படியெனத் தெரியவில்லை.

பெரிய கொடுமை என்னவென்றால், சிவகங்கை அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐயிடம் ஒப்படைக்கக் கூடாது; தமிழ்நாட்டிலேயே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்தான் த.வெ.க. தலைவர் விஜய்! அது அப்போ! (அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த ஸ்டோரியில் ஜனநாயகன் பற்றிய பொலிடிகல் ஒன்லைன் – பாவம், இனி, சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதைதான்! திரைக்கதையை விலாவாரியாகத் தேவைப்பட்டால் எழுதலாம்).

கரூர்ப் பலி தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரவும் இந்த சதிக் கோட்பாடுகள், நீதிமன்றங்களில் பேசப்படும் வாதங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் இடைவிடாத கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் பார்க்க, ஒருவேளை இந்த 41 பேரும் வேண்டுமென்றே விருப்பப்பட்டு விஜய் கூட்டத்துக்கு வந்து - திரை நடிகரை அரசியல் தலைவராக மாற்ற வேண்டும் என்பதற்காக - தற்கொலை செய்துகொண்டிருப்பார்களோ? என்றுகூட சந்தேகிக்க நேர்ந்துவிடும் எனத்  தோன்றுகிறது.

எங்கோ இருந்தபடி, இப்போது இந்த மண்ணில் தங்களின் மரணம் தொடர்பாக நடக்கிற எல்லாவற்றையும் (நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும்) கவனித்துக் கொண்டிருக்கிற அந்த 41 உயிர்களின் ஆன்மாக்களும் என்ன நினைத்துக் கொண்டிருக்கும்? அவை சாந்தியடையப் போகின்றனவா? அல்லது சபிக்கப் போகின்றனவா? யாரை?

Summary

The background behind the Supreme Court's order for a CBI investigation into the Karur stampede deaths...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com