
குழந்தைக்குக் காய்ச்சலும் ஜலதோஷமும். வழக்கம்போல டாக்டரிடம் செல்கிறார்கள். அவரும் மருந்து மாத்திரைகளுடன் இருமல் மருந்தும் எழுதித் தருகிறார். வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்று குழந்தைக்குக் கொடுக்கிறார்கள், குழந்தை வயிறு வலிப்பதாகக் கூறுகிறான்/ள். பிறகு வாந்தி. தொடர்ந்து மயங்கி சொணங்கிப் போகிறது குழந்தை. சிறுநீர் பிரியவில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டனவாம். குழந்தையின் உயிரும் போய்விட்டது – இவையெல்லாம் ஒரு குழந்தைக்கு மட்டும் அல்ல; 24 குழந்தைகள்! எல்லாரும் இறந்துவிட்டனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் சிந்த்வாரா அருகே பராஸியா என்ற இடத்திலும் ராஜஸ்தானிலும்தான் இந்தப் பெருந் துயரங்கள்.
செப். 2 ஆம் தேதியே முதல் குழந்தை பலியாகியிருக்கிறது. அடுத்தடுத்து குழந்தைகள் பலியாகிக் கொண்டேயிருந்திருக்கின்றன. எல்லாரும் அசுத்தம் கலந்த தண்ணீர், வேறு உணவுப் பொருள் கலப்படம் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருந்திருக்கின்றனர். யாருக்கும் சரியான காரணம் தெரியவில்லை. செப். 22 ஆம் தேதிதான் ஒரு டாக்டர், இந்தக் குழந்தைகள் அனைவருமே சிறுநீரகங்கள் செயலிழப்பால்தான் இறந்திருக்கின்றனர்; எனவே, இவர்களுக்குப் புகட்டப்பட்ட மருந்தில்கூட ஏதேனும் கலந்திருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இத்தனைக்கும் நடுவே மருந்தெல்லாம் பெர்பக்ட் என்று மத்திய அரசு, மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்திருக்கின்றனர். டாக்டர் எழுப்பிய சந்தேகத்துக்குப் பிறகு இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சோதிக்கத் தொடங்கினால், ஆமாம், இருமலுக்காக இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற மருந்தில் மிகவும் ஆபத்தான டைஎத்திலீன் கிளைகால் என்ற விஷப் பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது. இருமல் மருந்தில் இந்த வேதிப்பொருளின் அளவு ஒரு சதவிகிதம்கூட இருக்கக் கூடாது; ஆனால், 48 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருந்திருக்கிறது. எல்லாமே 60 மி.லி. மருந்து பாட்டில்கள்.
உயிரிழப்புக்குக் காரணமான கோல்ட்ரிப் இருமல் மருந்தைத் தயாரித்தது, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியிலுள்ள ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம். தமிழ்நாடு அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சோதனைகள் நடத்தி - ஏராளமான விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன - நச்சுத் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது - 48 மணி நேரத்தில் நிறுவனத்தை மூடிவிட்டார்கள். மருந்து விநியோகத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
இவ்வாறு டைஎத்திலீன் கிளைகால் கலந்த மருந்தைக் குடித்ததால் உயிர்கள் மடிவது இந்தியாவுக்குப் புதிதல்ல.
நாற்பதாண்டுகளுக்கு முன், 1986-ல், மும்பையில் இதே விஷப் பொருளான டைஎத்திலீன் கிளைகால் கலந்த இருமல் மருந்தைக் குடித்ததால் சிறுநீரகங்கள் செயலிழந்து 14 பேர் உயிரிழந்தனர். 1998-ல் தில்லியில் 150 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதில், 33 பேர் உயிரிழந்தனர். 2019 டிச. – 2020 ஜனவரியில் ஜம்மு – காஷ்மீரில் 12 குழந்தைகள் இறந்தன. இப்போது மீண்டும், மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் 24 பேர், பெரும்பாலும் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளே இறந்திருக்கின்றனர்.
இந்தியத் தயாரிப்பான இருமல் மருந்துகளில் கலப்படம் காரணமாக, 2022-ல் காம்பியா (66 குழந்தைகள்), உஸ்பெகிஸ்தான் (65 குழந்தைகள்), கேமரூன் ஆகிய நாடுகளில் 140-க்கும் அதிகமான குழந்தைகள் இறந்ததிலிருந்து, 2023 ஜூன் முதல் ஏற்றுமதிக்கான இருமல் மருந்துகளைப் பொருத்தவரை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் கூடுதல் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டுச் செயல்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்குள் விற்கப்படும் இருமல் மருந்துகளுக்கு இத்தகைய தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மருந்துகளில் கலப்படம் பற்றி உலக சுகாதார நிறுவனம் மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டிருந்தபோதிலும் இன்றைய சூழலில் தரக் கண்காணிப்பைப் பலப்படுத்தவோ, தரத்தில் குறைந்த மருந்துகளைக் களைவதிலோ இந்தியாவின் மருந்துத் துறை அலுவலர்கள் தோற்றுவிட்டார்கள் என்றே சொன்னாலும் எவ்விதக் குற்றமுமில்லை. ஏனென்றால் நடக்கிற, கேள்விப்படுகிற, வெளிப்படுகிற விஷயங்கள் எல்லாமும் அப்படித்தான் இருக்கின்றன.
போயும் போயும் குழந்தைகளுக்குக் கொடுக்கிற இருமல் மருந்தில் எதற்காக விஷத் தன்மை கொண்டதான இந்த டைஎத்திலீன் கிளைகாலைக் கலக்கிறார்கள்?
உள்ளபடியே, திரவ மருந்துகளுடன் அவற்றின் அடர்த்தியைக் கூட்டுவதற்காக இனிப்புச் சுவையுடன் கூடிய, நிறமோ, வாசனையோ இல்லாத, எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத, கிளிசரின் அல்லது ப்ரொபலீன் கிளைகால் ஆகியவை சேர்க்கப்படுகின்றன.
வாகனங்களில், எந்திரங்களிலுள்ள பிரேக்-குகளுக்கான திரவமாக, கூலண்ட் ஆயிலாக, ஏர்கண்டிஷனர், ஃபிரிட்ஜ், ஃப்ரீஸர் போன்றவற்றில் உறைதலைத் தடுக்கும் கரைசலாக மற்றும் ரெசின், சாயங்கள் போன்ற தயாரிப்புகளிலும் மிகவும் ஆபத்தான டைஎத்திலீன் கிளைகால் பயன்படுத்தப்படுகிறது.
பிறகு ஏன் மருந்துகளில் டைஎத்திலீன் கிளைகாலைக் கலப்படம் செய்கிறார்கள்? கிளிசரின் அல்லது ப்ரொபலீன் கிளைகால் போன்றே நிறமற்ற, வாசனையற்ற, இனிப்பானது டைஎத்திலீன் கிளைகால் – ஆனால், விலையோ மிக மிக மலிவானது!
இந்தியாவில் கிளிசரின் (அல்லது ப்ரொபலீன் கிளைகால்) விலை கிலோவுக்கு ரூ. 998. ஆனால், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் டைஎத்திலீன் கிளைகாலோ கிலோ ரூ. 110 விலையிலேயே கிடைக்கிறது – 9 மடங்கு மலிவு!
எனவே, மருந்துகளில் பயன்படுத்த வேண்டிய கூடுதல் விலையுள்ள கிளிசரினுக்குப் பதிலாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மலிவான டைஎத்திலீன் கிளைகாலைக் கலந்துவிடுகின்றனர் (கருட புராணத்தில் இதற்கென்ன தண்டனை என்று விசாரிக்க வேண்டும்!). தெரிந்தே கலக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்; தெரியாமல் நடந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. டைஎத்திலீன் கிளைகாலை ஒருவர் சிறு அளவில் உட்கொள்வதுகூட சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்துவிடும், பெரும்பாலும் மரணமும் சம்பவிக்கும், குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கு.
1937-ல் அமெரிக்காவில் இதே டைஎத்திலீன் கிளைகால் கலப்படம் காரணமாக முதலும் கடைசியுமாக 105 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தங்கள் தயாரிப்புகளின் தரத்தை விற்பனைக்கு அனுப்புமுன் மருந்துத் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற அமெரிக்க உணவு – மருந்து நிறுவனத்தின் சட்டம் இயற்றப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 90 ஆண்டுகளில் இதுவரையிலும் மறுபடியும் இதுபோன்ற கலப்படமும் நடைபெறவில்லை; எந்தவோர் உயிர்ப்பலியும் நேரவில்லை.
ஆனால், இந்தியாவில் டைஎத்திலீன் கிளைகால் கலப்படம் காரணமாகத் தொடர்ந்து குழந்தைகள் இறந்துகொண்டுதானிருக்கின்றனர். ஜம்மு – காஷ்மீரில், ஹிமாச்சலில், தில்லியில்... இப்போது மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில்.
இவற்றுக்கெல்லாம் என்ன தரவுகள் இருக்கின்றன? இந்த மரணங்களைத் தொடர்ந்து, எத்தகைய பாதுகாப்பு - கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? அப்படி எடுக்கப்பட்டிருந்தால் ஏன் மீண்டும் அதே பாணி, அதே விஷக் கலப்பால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன? (இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்?).
கிளிசரின், ப்ரொபலீன் கிளைகால் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்தைப் பயன்படுத்தும் முன் கலப்பு, விஷத் தன்மை பற்றி மதிப்பிட வேண்டும் என்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இந்தக் கலப்படம் என்னவோ தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
இந்த மாதிரி உயிரிழப்புகள் நேரிடும்போதெல்லாம் தொடக்கத்தில் எப்போதுமே அதிகாரிகள் மருந்துகளில் எந்தக் கலப்படமும் இல்லை; தரமாகத்தான் இருக்கின்றன என்றுதான் கூறுகிறார்கள். பெரும்பாலும் கலப்படம் என்பதை அதிகாரிகள் ஒப்புக் கொள்வதேயில்லை. வேறு வழியே இல்லாத கட்டத்தில்தான் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் குழந்தைகள் செத்துக்கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கம் இதே மருந்தை டாக்டர்கள் பரிந்துரைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்! ஒருவேளை முதல் குழந்தை பலியானபோதே எச்சரிக்கையடைந்து, கலப்படத்தைக் கண்டறிந்திருந்தால் இத்தனை குழந்தைகள் பலியாவதைத் தடுத்திருக்க முடியும்; சில குழந்தைகளுடன் உயிர்ப் பலி நின்றிருக்கும்.
மிகவும் கூடுதலான அளவில் டைஎத்திலீன் கிளைசால் இருந்ததால் மரணங்கள் நேரிடவே கலப்படமும் பாதிப்பும் உடனடியாகத் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கலப்படத்தின் அளவு குறைவாக இருக்கும்பட்சத்தில் உடனடி பாதிப்பு தெரியாது; ஆனால், உறுதியாக இந்த மருந்து புகட்டப்படும் குழந்தைகளின் சிறுநீரகங்கள் மெல்லப் பழுதடையும் ஆபத்துகள் இருக்கின்றன. இதுபோல, நாடு முழுவதும் குறைவான அளவில் டைஎத்திலீன் கிளைகால் கலக்கப்பட்ட இருமல் மருந்துகள் எவ்வளவு புழக்கத்தில் இருக்கின்றனவோ? எத்தனை குழந்தைகளை மெல்லக் கொன்றுகொண்டிருக்கின்றனவோ? குழந்தைகளுக்கு நம்பி, இருமல் மருந்தைக் கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா?
நாடு முழுவதும் சிறிதும் பெரிதுமாகப் பல நூறு மருந்து உற்பத்தி நிறுவனங்கள். பல்லாயிரக்கணக்கான வகைகளில் மருந்துகள், மாத்திரைகள். ஒவ்வொரு நாளும் உடல் நலக் குறைபாட்டுக்காக லட்சக்கணக்கானோர் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள், நாமும் தவறாமல் தின்றுகொண்டிருக்கிறோம். நம்முடைய மருந்துகள் எல்லாம் பாதுகாப்பானவைதானா? யார் இதை உறுதி செய்கிறார்கள்? யாருடைய உத்தரவாதத்தை நாம் நம்பியிருக்கிறோம்?
தமிழ்நாட்டிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 100 நாடுகளுக்கு ரூ. 12 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 15 ஆயிரம் கோடி வரை மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாநிலத்தில் மட்டும் 397 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் எத்தனை இருக்கும்? இவற்றையெல்லாம் கண்காணிக்கத் தற்போது நம்மிடமுள்ள ஏற்பாடுகள் போதுமானவைதானா? அரசும் அதிகாரிகளும்தான் நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்ல வேண்டும்!
மருந்துகள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு மதிப்புமிக்க இடமிருக்கிறது; இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், தரக்குறைவான இதுபோன்ற மருந்துகளைத் தயாரிப்பதன் மூலமும் விநியோகிப்பதன் மூலமும் இந்த நம்பகத்தன்மை இழக்கப்படுகிறது. காலப்போக்கில் இது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
தற்போதைய கலப்படத்தில் தொடர்புடைய ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உரிமம் பெற்றிருப்பதாகவும் 2016 ஆம் ஆண்டில் உரிமத்தைப் புதுப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் எங்கள் கண்காணிப்பு வலையத்திலேயே இல்லை என்று மத்திய அரசின் மருந்துத் துறை அலுவலர்கள் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்றால் எப்படி?
தகவல் கிடைத்ததும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் விரைந்து மருந்து நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் இங்கே எவ்வித சோதனையும் நடத்தப்பட்டதில்லை எனத் தெரியவந்திருக்கிறது. எந்த வகையிலும் ஒரு மருந்துத் தயாரிப்பு ஆலைக்குப் பொருத்தமில்லாத வகையில், சூழ்நிலையில்தான் ஆலை இருந்திருக்கிறது. ஆலையில் கைப்பற்றப்பட்ட மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைகால் இருந்திருக்கிறது. மூலப் பொருள்கள் வாங்குவதில் தொடங்கி மருந்துகளை விநியோகத்துக்கு அனுப்பும் வரையிலான ஒட்டுமொத்த செயல்பாடுகளில் 364 விதிமீறல்கள் இருந்திருக்கின்றன.
மருந்து ஆலைகளில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்த வேண்டும்; மத்திய அதிகாரிகள் கடந்த மூன்றாண்டுகளாக ஆய்வு செய்யவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஆய்வு செய்யாததற்காக தமிழ்நாட்டிலும் இரு அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு மருந்திலும் பயன்படுத்தப்படும் பொருள்களை இடைவிடாமல் பதிந்து வைக்க வேண்டும். ஆனால், பெரு நிறுவனங்களைத் தவிர்த்து, இவற்றிலெல்லாம் யாரும் கவனம் செலுத்துவதில்லை. அல்லது பெயரளவுக்குப் பட்டியலைப் பராமரிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
கிளிசரின் அல்லது ப்ரொபலீன் கிளைகாலுக்குப் பதிலாக ஆபத்தான டைஎத்திலீன் கிளைகாலைப் பயன்படுத்தினால் ஒரு கிலோவுக்கு சுமார் 800 ரூபாய் வரை மிச்சமாகலாம்; 60 மிலி கொண்ட ஒரு பாட்டிலுக்கு என்று பார்த்தால் போயும் போயும் எவ்வளவு பணத்தை மிச்சப்படுத்திவிட முடியும்? இதற்காகவா இந்தக் கொலைகார டைஎத்திலீன் கிளைகாலை குழந்தைகளின் மருந்துடன் கலப்பார்கள்?
இவ்வளவு குழந்தைகள் இறந்த பிறகும் இதுபோன்ற வழக்குகளில் மட்டும் பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது? வழக்குப் பதிவு செய்வார்கள், கைது செய்வார்கள், தயாரிப்பு நிறுவனம் மூடப்படும், காலநேரம் எல்லாம் பார்த்துக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வார்கள், வழக்கு விசாரணை நடந்து...கொண்டே... இருக்கும், இவற்றுக்கிடையே, குற்றம் சாட்டப்பட்டோரும், அதாவது, எண்ணற்ற குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானவர்களும் இந்த வழக்குகளில் தொடர்புடைய பிறரும் பிணையில் வெளியே வந்துவிடுவார்கள்.
இன்னொரு பெயரில், அல்லது அதே பெயரிலேயேகூட தொடர்ந்து மருந்து தயாரிப்பு - விநியோகத்தில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். உஸ்பெகிஸ்தான் சாவுகளுக்குக் காரணமாகக் கூறப்பட்ட நிறுவனமேகூட மீண்டும் தொழிலைத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைநீக்கம் செய்யப்படும் அரசு அதிகாரிகளும் விரைவில் மீண்டும் பணியில் சேர்ந்துவிடுவார்கள். மறுபடி எல்லாம் வழக்கம்போல தொடரும் – இன்னொரு தருணத்தில் இதுபோன்ற மரணங்கள் நேரும் வரை. உள்ளபடியே, இதுவரையில் இதுபோன்ற மருந்து கலப்படக் குற்றங்களுக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது?
பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் மருத்துவ கவனக் குறைவுதான் ஒருவரின் மரணத்துக்குக் காரணம் என அறியப்பட்டால் மிகப் பெரிய அளவில் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. இங்கே அத்தகைய நடைமுறைகள் எதுவுமில்லை. கலப்பட குற்றங்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால், இங்கே... இதுபோன்ற குற்றங்களுக்கு, நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்கிறார்கள். ஆனால், தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளே மிகவும் அதிகம் என வழக்கறிஞர் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
குற்றமிழைத்தவர்களுக்கு, கொத்துக் கொத்தாக இளம்பிஞ்சுகளின் மரணங்களுக்குக் காரணமானவர்களுக்கு, உயிர் காக்கக் கொடுக்கப்படும் மருந்துகளில் லாபம் கருதி விஷத்தைக் கலந்து விற்பவர்களுக்கு, அதிகபட்சமாக மரண தண்டனை, முழுவதும் சொத்துகள் பறிமுதல், தொடர்புடைய அரசு மற்றும் துறை அதிகாரிகளுக்கும் கணிசமான காலத்துக்குச் சிறைத்தண்டனை என்றெல்லாம் சட்டம் இயற்றினால் ஒருவேளை மருந்துக் கலப்படங்கள் தவிர்க்கப்படலாம்.
தவிர, சிறு, பெரு மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். இவர்களின் பின்புலம் அறியப்பட வேண்டும். இவர்களின் அரசியல் தொடர்பும் கட்சிகளுக்கு இவர்கள் அளிக்கும் நன்கொடைகளும்கூட கவனிக்கப் பெற வேண்டும்.
ஒவ்வொரு முறையும் மருந்து புகட்டும்போது, மருந்தைக் குடித்ததும் குழந்தை நலம் பெறுமா? அல்லது உயிரிழக்குமா? என்ற அச்சத்துடன் எவ்வாறு குழந்தைகளுக்கு மருந்துகளைத் தர முடியும்? வாழ்வா, சாவா? யார் தீர்மானிக்கிறார்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.