
ஒன்பது குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழக்கக் காரணமான கரூர் நெரிசல் பலி சம்பவம் நடந்து இன்று ஒன்பதாவது நாள். இன்னமும் கரூரைப் பற்றிதான் மக்களும் அனைத்து ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எவ்விதமான அரசியலோ, தொலைநோக்கோ, செயல் திட்டமோ, துணிவோ இல்லாமல், திரைப்பட ‘பஞ்ச்’ வசனங்களில் திளைத்துக் கிறங்கிக் கிடக்கும் ரசிகர்களை மட்டுமே நம்பி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்சி தொடங்கி, இன்னும் எட்டு மாதங்களில் தனித்தே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் ஆகிவிடலாம் என்று நினைத்த ஹீரோவின் கனவைக் கரூர் கலைத்துப் போட்டிருக்கிறது.
ஒருபுறம் அந்த மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தபோதே - தொண்டர்கள் எல்லாம் கத்திக் கதறிக் கொண்டிருந்தபோதே, எழுதிவைத்திருந்த உரையை நிறுத்தாமல் வாசித்து முடித்த பின், விரைந்து புறப்பட்டு, திருச்சியிலோ, சென்னையிலோ விமான நிலையங்களில் எதுவும் பேசாமல் வீட்டைச் சென்றடைந்துவிட்ட ஹீரோ, மூன்றாவது நாளில் ஒரு விடியோவை வெளியிட்டார் – அந்த முகபாவனைக்கு என்ன பொருள் என்பதை அவருடைய இயக்குநர்களால் மட்டும்தான் விளக்க முடியும்.
இயல்பான மனிதர், துயரத்தைத் தாங்க முடியாமல்தான், என்ன செய்வதெனத் தெரியாமல் புறப்பட்டுப் போய்விட்டார் என்று வெள்ளந்தியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களையும் அதிர்ச்சியுறச் செய்யும் வகையில் – ‘அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவாய்ட் செய்தேன்’ என்று குறிப்பிட்டு – அத்தனையும் அறிந்தேதான் அம்போவென விட்டுவிட்டு வந்தேன் எனத் தம் பேச்சில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
‘ஐந்து இடங்களில் பேசியிருக்கிறேன்; கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லாம் தெரியும். சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளிவரும்’ என்று ‘ரகசியம்’ பேசியதுடன், ‘தரப்பட்ட இடத்தில் பேசியதைத் தவிர தவறு எதுவும் செய்யவில்லை’ என ஏதோ ஒன்றுமறியா அப்பாவி போலக் குறிப்பிட்டார். அப்படியானால், யார் மீது பழிபோட முயலுகிறார்?
பேச்சை முடிக்கும் முன், ‘சிஎம் சார், பழிவாங்கும் எண்ணமிருந்தால் என்னை ஏதாவது செய்யுங்கள்; அவர்கள் மீது கைவைக்காதீர்கள். வீட்டில் இருப்பேன் அல்லது ஆபிஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்றார் ஹீரோ, திரைப்படத்தில் போலவே. இது என்ன எச்சரிக்கையா? மிரட்டலா? அல்லது சவாலா? என்ன சொல்ல வருகிறார்? என்ன எதிர்பார்க்கிறார்? எப்படிப் புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை.
ஒரு வரிகூட வருத்தம் தெரிவிக்கவில்லை. எவ்விதத்திலும் இந்தப் பெருந்துயரத்துக்குப் பொறுப்பேற்கவில்லை. உயிரிழந்த அனைவரும் தன்னைப் பார்க்க வந்தவர்கள், தன்னுடைய ரசிகர்கள், தனக்காகக் காத்திருந்தவர்கள்தான் என்பதற்கான குறைந்தபட்ச குற்றவுணர்வுகூட பிரதிபலிக்கவில்லை. குடியரசுத் தலைவரில் தொடங்கி, ஊர் உலகமே இரங்கல் தெரிவித்து மூன்று நாள்கள் கழித்து, சம்பந்தமே இல்லாதவரைப் போல, இந்தச் சாவுகளில் தனக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லாதவரைப் போல, விடியோவில் முகங்காட்டுகிறார்; சமூக ஊடகங்களில் கூடுதலான எரிச்சல் வெளிப்படத் தொடங்கியது.
என்ன நினைத்து, எதை எதிர்பார்த்து இந்த விடியோவை ஹீரோ வெளியிட்டாரோ தெரியவில்லை; இதைப் பார்த்த பிறகுதான் சற்று நெகிழ்வாக இருந்த திருமாவளவன், சீமான் போன்ற தலைவர்களும் எண்ணற்ற ரசிகர்களும் அவரைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஏறத்தாழ 13 ஆயிரம் காமென்ட்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் திட்டித் தீர்த்துள்ளனர். இது கொஞ்சம் வேற மாதிரிதான்!
இந்தத் தருணத்தில் தலைவா என்ற தன்னுடைய படம் வெளிவர முடியாத சூழலில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவைச் சந்திக்க முயன்று முடியாமல்போன நிலையில் இதே ஹீரோ பேசி வெளியிட்ட விடியோவை (இன்னமும் அவருடைய எக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது) ஒரு முறை பார்க்க வேண்டும்; என்னே ஒரு பவ்யம், பணிவு, அடக்கம்! நேரம் இருப்பவர்கள் இரண்டையும் டீகோடிங் செய்து – ஒப்பிட்டு, இன்றைக்கு என்னவாக மாறியிருக்கிறார் என்றறிந்து கொள்ளலாம். அந்த டோன், அந்த ஆட்டிடியூட்!
தலைவர் வழியில்தான் மற்றவர்களும். தலைவருடன் சேர்ந்து எப்படிக் கூண்டோடு காணாமல் போனார்களோ அதேபோல அவரை மாதிரியே ஒவ்வொருவராக வெளிவரத் தொடங்கி, முன்பிணை கேட்க நீதிமன்றம் சென்றுகொண்டிருக்கின்றனர். தலைவருக்கு எல்லாமாக இருந்த (இப்பவும் இருக்கிறாரா எனத் தெரியவில்லை) ஓர் இரண்டாம்நிலைத் தலைவர், தான் கைது செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக - முன்பிணை கிடைக்க வேண்டும் என்பதற்காக, இது எதிர்பாராத விபத்துதான். (ஏற்கெனவே பிரசாரம் செய்தபடி) திட்டமிட்ட சதி அல்ல; இதில் தனக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; மாவட்டச் செயலர்தான் கூட்ட ஏற்பாடுகளைச் செய்தார். அவரைக் கைது செய்துவிட்டீர்களே. பிறகு என்னை எதற்காகக் கைது செய்ய வேண்டும்? விட்டுவிடுங்கள் என்கிறார்.
இது வரையிலும் தலைவருக்காக, தலைவரைப் பார்க்க வந்து தங்கள் இன்னுயிரைத் துறந்தவர்களின் இல்லங்களின் பக்கம் கட்சியின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களின் நடமாட்டமே இல்லை (இப்போதுதான் மாவட்ட அளவில் சிலர் வரத் தொடங்கியுள்ளனராம்). பாவம். இவருக்காகத்தான் இத்தனை பேர் செத்துப் போயிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களைக் காணச் சகிக்கவில்லை. நிறைய ஒளிப்பதிவுகள் பரவுகின்றன. புதிது புதிதாக விடியோக்கள் வெளிவருகின்றன (நிகழ்ந்ததைக் காட்டுகிற இவையெல்லாமும் உரிய வல்லுநர்கள் உதவியுடன் ஆராயப்பட வேண்டியதும் அவசியம்). ஒரு பக்கம் கீழே விழுந்து மயங்கிக் கிடக்கும் ஒருவரின் இதயத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்னொருவர் பத்து பேர் செத்துவிட்டார்கள் என ஹீரோவைப் பார்த்துக் கத்துகிறார். பேச முடியாத ஒருவர் சைகையிலேயே 5 பேர் செத்துக்கிடப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், எதைப் பற்றியும் கவலையில்லாதவராக, கவனிக்காதவராக (கால்ஷீட் நேரம் முடியப் போகிற அவசரத்தில் இருப்பவரைப் போல) கையில் தாளோடு நடந்தவாறே பேசிக்கொண்டிருக்கிறார் ஹீரோ. சாக்கடையில் விழுந்து மிதித்து நசுக்கப்பட்ட குழந்தைகள். விழுந்துகிடக்கும் பெண்கள். உயிர் இருக்கிறதா, போய்விட்டதா என்றறியாத நிலையில் மயக்கமுற்றுக் கிடப்போரைத் தூக்கிக் கொண்டோடும் மக்கள். பெருங்கொடுமை.
“சம்பவம் நடந்தவுடன் தொண்டர்களையும் ரசிகர்களையும் கைவிட்டுவிட்டுத் தவெகவினர் அனைவரும் சென்றுவிட்டனர். இதுபோன்ற சம்பவத்துக்குக் காரணமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகப் பொறுப்பேற்று வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை. இது அந்தக் கட்சித் தலைவரின், கட்சியின் மனநிலையையே காட்டுகிறது. கட்சித் தலைவருக்குத் தலைமைத்துவ பண்பே இல்லை. ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது என்றிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். கூடவே, இந்த அசம்பாவிதத்துக்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வோ காவல்துறையினரையும் ஒரு பிடி பிடித்திருக்கிறது.
ம். இப்போது எல்லாரும் பேசிப் பேசி என்ன செய்ய? ஔவையார் சொன்னபடி, ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? வழக்கம்போல பழிபோடும் பாலிடிக்ஸ் தொடங்கிவிட்டது. ஊர் வழக்கப்படி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டனர்.
கட்சித் தலைவரே கண்டுகொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்ட நிலையில், இரவோடு இரவாகச் சென்னையிலிருந்து கரூருக்குச் சென்று, அதிகாலையில் அஞ்சலி செலுத்தி அனைவரையும் பார்த்து ஆறுதல் சொன்னதையே, அரசியல் ஆதாயத்துக்காக வந்தார் முதல்வர் ஸ்டாலின் என்று கூறுகிற லெவலுக்குச் சென்றுவிட்டிருக்கிறது நிலைமை (கள்ளக்குறிச்சிக்குச் செல்லவில்லையே என்கிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததையும் கரூரில் நெரிசலில் சிக்கிக் குழந்தைகள் எல்லாமும் இறந்ததையும் எப்படி ஒன்றாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது? அப்போது அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகைக்காகவே கடும் விமர்சனங்கள் இருந்தனவே). இவற்றைப் பற்றியெல்லாம் ஹீரோ என்ன சொல்லப் போகிறார், எப்போது சொல்லப் போகிறார்?
அமைச்சர்களான செந்தில் பாலாஜி உடனே வந்ததும் அன்பில் மகேஸ் அழுததும்கூட ஆதாயத்துக்காக என்று விமர்சனம்!
அதிரடியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துவிட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் குழு வந்துசென்றிருக்கிறது (இப்படித்தான் எல்லா மாநிலங்களுக்கும் எல்லா உயிர்ப் பலிகளுக்கும் செல்கிறார்களா? அல்லது தமிழ்நாடு ஸ்பெஷலா?). அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம், பா.ஜ.க.வின் அண்ணாமலை இன்னொரு பக்கம், பிறகு நிறைய ஆணையங்கள் வேறு.
காவல்துறைக்கும் அதன்வழியே அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. யாராலும் தட்டிக் கழிக்க முடியாது; கூடாது. எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டது என்பதில்தான் சிக்கல். கட்டுக்கடங்காத, கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என்றால் காவல்துறை நினைத்தால் கடைசி நேரத்தில்கூட கூட்டத்தையே ரத்து செய்திருக்க முடியும்தானே?
கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றால் ஆங்காங்கே ஏன் மக்களைத் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாது? நாமக்கல்லில் இருந்து விஜய்யுடன் தொடர்ந்து வர ரசிகர்களை / தொண்டர்களை ஏன் அனுமதிக்க வேண்டும்? சம்பவ இடத்துக்குச் சற்று முன்னாலேயே பேசுமாறு விஜய்யிடம் காவல்துறை அறிவுறுத்தியதாகக் கூறுகிறார்கள். யார் கூறியது, யாரிடம் கூறினார்கள், கேட்க மறுத்தால் காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சொன்னால் கேட்க மறுக்கிறார்கள், நடக்கிறபடி நடக்கட்டும் என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்கவே முயன்றதாகத் தோன்றுவது நமக்கு மட்டும்தானா?
விஜய்யின் பிரசார வாகனத்தின் உள்ளே, வெளியே பதிவுகள் உள்பட அனைத்து விடியோ பதிவுகளும் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட வேண்டும். கிடைக்கிற ஒரு விடியோவிலிருந்து, சிலர் சொல்கிறபடி, செருப்பு வீச்சு சதி அல்ல; வெறுத்துப் போன ஒரு தொண்டர்தான் வீசுகிறார் எனத் தோன்றுகிறது. எல்லாமே இந்த விசாரணைகளுக்குப் பிறகு ஒருவேளை தெரிய வரலாம்.
ஒரேயடியாக இந்த சாலை வலங்களுக்கு முடிவு கட்டிவிட்டால்கூட எவ்வளவோ நல்லது. ஊருக்கு வெளியே ஏதோவோர் இடத்தில் பிரசாரக் கூட்டங்களை நடத்த அனுமதித்து, அங்கேயே அனைத்துத் தலைவர்களும் பேசிவிட்டுச் செல்லுமாறு செய்யலாம். வேண்டியவர்கள் சென்று பார்த்துவிட்டு, கேட்டுவிட்டுப் போகட்டும். என்ன விபரீதம் நடந்தாலும் அந்தந்தக் கட்சியையும் கட்சித் தலைமையையும் பொறுப்பாக்கிவிட்டால் இன்னமும் சிறப்பு. மற்றவர்களுக்கு ஏன் வீண் தொல்லை?
கொஞ்சம் குழந்தைத்தனமாகத் தோன்றினாலும் பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவரான விஜய் மட்டும் ஏன் வழக்கில் எங்கேயும் கொண்டு வரப்படவில்லை? 41 பேர் உயிரிழக்க நேரிட்டதில் விஜய்க்குப் பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? இன்னும் சிலர் வழக்கமாகக் கேட்கும் மற்றொரு கேள்வி - ஆனால், சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கும் – ஜெயலலிதாவாக இருந்தால் இப்படித்தான் செயல்படுவாரா? (இன்னொரு பக்கம் ஏதோ மைண்ட் வாய்ஸ், விஜய்தான் கட்சியே தொடங்கியிருக்க மாட்டாரே!). இல்லை, ஒருவேளை அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், அழுகிற மாதிரி அழு என்று ஏதாவது நடக்கிறதா? (திமுக – தவெக கூட்டா? ஏன் அஞ்சுகிறார்கள்? என்றிருக்கிறார் திருமாவளவன்).
கரூர்ப் பலி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையத்தை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைச் சுடுவதுபோல காவல்துறை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாகக்கூட இதே நீதிபதி அருணா ஜெகதீசன்தான் விசாரித்து அறிக்கையளித்தார், மிகக் கடுமையான கண்டனங்கள் மற்றும் பரிந்துரைகளுடன். ஆனால், இன்னமும்கூட அவை நிறைவேற்றப்படவில்லை. தண்டிக்கப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பதவி உயர்வு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆக, இந்த ஆணையத்தின் விசாரணையும் அறிக்கையும் என்னவாகும்? உயர் நீதிமன்றமும் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது. பார்க்கலாம்.
கொடூரமான இந்தச் சம்பவம் நடந்த முதல் நாளில்தான் கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள் தவெக ஆதரவு ஊடகவாசிகள். ஆனால், அடுத்தடுத்து சதி, மின் துண்டிப்பு, விஷ வாயு, செந்தில் பாலாஜி, கொன்று விட்டார்கள், கட்சிக்காரர்களே அல்லர்... என ஏராளமாகத் தற்போது சமூக ஊடகங்களில் – வலைத்தளங்களில் இவர்களின் பிரசாரம் உச்சம் தொட்டிருக்கிறது. நல்லவேளை, விஜய் கரூருக்கே வரவில்லை, அவரைப் போன்ற டூப்பைத் திமுகதான் / அல்லது செந்தில் பாலாஜிதான் ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டார்கள் என்று மட்டும் கூறவில்லை (இதுகூட நல்ல ஐடியாவா இருக்கிறதே என்று யாருக்கும் தோன்றிவிடாமல் இருக்க வேண்டும்).
இந்த ரசிக இளைஞர்களிடையே இருப்பது மிகவும் ஆபத்தான மனப்போக்காகத்தான் கருதப்படும். கொஞ்சமும் அச்சமின்றி, வெறிகொண்டவர்களைப் போல தீவிரமாகச் செயல்படுகிறார்கள். திரையரங்குகளிலும் தொலைக்காட்சிகளிலும் சாகச ஹீரோவாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஒருவர், திடீரென மேடையில் தோன்றி நாட்டையே மாற்றிக் காட்டப் போவதாக - இறந்துவிட்ட அத்தனை தலைவர்களையுமே வழிகாட்டிகள் எனக் கூறிக்கொண்டு - ‘நானே முதல்வர்’ என சகட்டுமேனிக்கு அத்தனை கட்சித் தலைவர்களுக்கும் சவால் விடும்போது புல்லரித்துப் போகிறார்கள் இவர்கள்.
ஒருகாலத்தில் அதிமுகவைத் தொடங்கியபோது, எம்ஜிஆர் ரசிகர்களை அரசியல் அறியாதவர்கள், விசிலடிப்பவர்கள் என்று குறையாகக் கூறுவார்கள்; ஆனால், உண்மை அப்படியல்ல. அவருக்கு அடுத்த நிலையில் எண்ணற்ற தலைவர்கள் இருந்தார்கள்; வழிநடத்தினார்கள். அந்தப் பாவமோ என்னவோ, மக்கள் இப்போது உண்மையான சினிமா ரசிகர்களைப் பார்க்கிறார்கள். கட்சியின் தலைவரைச் சுற்றிலும்கூட அரசியலாளர்கள் இல்லை என்று கூறப்படுவது எவ்வளவு பெருந்துயரம்?
கட்டுக்கடங்காத கூட்டம், கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் எத்தனை லட்சம் பேர் திரண்டிருப்பார்கள், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக. தொடர்ச்சியாக எத்தனை நாள் போராட்டம் நடைபெற்றது? எவ்வளவு காவல்துறையினர் இருந்தனர்? எத்தகைய ஒழுங்கு பின்பற்றப்பட்டது? அதெல்லாம் எவ்வாறு சாத்தியப்பட்டது? ஒழுங்கு!
இவர்கள் இப்படி இருப்பதையே தவெக தலைவர் விரும்புகிறார் போலிருக்கிறது. ஆசை வெட்கமறியாது என்பார்கள், அரசியலும் அறியாமல் போய்விடுவது எத்தனை பெரிய சோகம்? கட்டுக்கடங்காத – கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தைத் திரட்டுகிறவர், திடல்களுக்குச் செல்லாமல், எதற்காக வீதிகளில் பிரசாரத்தை நடத்த வேண்டும்? தன்னுடைய கட்சித் தொண்டர்களை, தன்னுடைய ரசிகர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாதா ஒரு தலைவரால்? கட்டுப்படுத்த முடியாதவர் ஒரு தலைவரா?
அப்படியானால், உள்ளபடியே நடிகர் கம் தலைவரான விஜய்யைப் பார்க்க வந்ததைத் தவிர, ரசிகர்களாக இருந்ததைத் தவிர வேறெந்தவொரு பாவமும் அறியாத இந்த 41 பேர் மரணத்துக்கு யார்தான் பொறுப்பு? விரிவான விசாரணைக்குப் பிறகேனும் விரைந்து சம்பந்தப்பட்ட அனைவருமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
திரை நிழலில் ஹீரோவாகத் தோன்றி அநீதிகளை எல்லாம் தட்டிக்கேட்டு, ஆபத்திலிருக்கும் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நிஜத்தில் பிணங்களோடு சேர்த்து எல்லாரையும் கைவிட்டு, 23 ஆம் புலிகேசியாகக் களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தலைதெறிக்கத் தப்பிச் செல்வதுடன் அதை நியாயப்படுத்திப் பேசுவதும் எத்தனை பெரிய நகைமுரண்? பாவம் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.