

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா?
மறைந்த ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (SIR) நடைபெற்றது முதல்வருக்குத் தெரியாததா என்ன? இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்?
மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி இருக்கையில் தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக அரசு?
தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதைத் தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல என்பது தங்களுக்கும் தெரியும்.
எனவே மழை வெள்ள பாதிப்புகள் தொடங்கி பயிர் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க SIR-ஐ கையில் எடுத்து, பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். எவ்வளவு மடைமாற்றினாலும் மக்கள் எதையும் மறக்கவும் போவதில்லை, மனம் மாறப்போவதுமில்லை. திமுகவின் தோல்வி நிச்சயம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
BJP state president Nainar Nagendran has said that the CM is looking for a reason for the defeat right now.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.