தென்காசி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அந்த மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 1,020 கோடி மதிப்பிலான 117 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,44,469 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், தென்காசி பற்றியும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ள 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' பற்றியும் பேசினார்.
இதன்பின்னர் தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார்.
விழாவில் பேசிய முதல்வர்,
"இன்றைக்கு இந்த தென்காசி மாவட்டத்தில், 141 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற 117 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 291 கோடி ரூபாய் மதிப்பிலான 83 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பேருக்கு 587 கோடி ரூபாய்க்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் என்று ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கி இருக்கிறேன்.
இந்த நான்கரை ஆண்டு காலத்தில், அனைத்து அரசுத் துறைகளின் மூலமாக தென்காசியில் நடைபெற்ற பணிகள் குறித்த ஒரு ஆய்வறிக்கையை தயாரிக்கச் சொல்லியிருந்தேன். அதை நான் வாங்கிப் பார்த்தபோது, எனக்கே மலைப்பாக இருந்தது! பெரும்பாலும், இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களும், கிராமங்களும் ஏதாவது ஒருவகையில் பயனடைந்திருக்கிறது என்று சொல்லத்தக்க வகையில் அந்த அறிக்கை இருந்தது.
அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த பணிகளில் சிலவற்றை மட்டும் ஹைலைட்டாக, தலைப்புச் செய்தியாக நான் சொல்லவேண்டும் என்றால்,
15 ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள்
16 தூர் வாரும் பணிகள்
குத்தம்பாஞ்சான், மகேந்திரவாடி, கழுநீர்குளம், கம்பனேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சமுதாயக் கிணறுகள்
சொக்கம்பட்டி, பெரும்புத்தூர், கூடலூர், பருவக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் உணவு தானியக் கிடங்குகள்
ஆலங்குளம், சிவகிரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
ராவுத்தபேரியில் எலுமிச்சை சிறப்பு மையம்
நடுவக்குறிச்சியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை
வினைதீர்த்த நாடார்பட்டி பள்ளியில் வகுப்பறைகள்
தென்காசி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு
மேலக்கரை நல்லூரில் சுகாதார நிலையம்
ஆழ்வார்குறிச்சி, குற்றாலம், திருவேங்கடம், பண்பொழி உள்ளிட்ட 12 ஊர்களில் குடிநீர் மேம்பாட்டு பணிகள்
இலஞ்சியில் புதிய சமுதாய நலக் கூடம் -
கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, கடையத்தை உள்ளடக்கிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் என்று ஏராளமான பணிகளை எல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள்!
உங்கள் அனைத்து ஊர் பெயர்களும் அரசின் அறிக்கையில் இருக்கிறது. அந்தளவுக்கு தென்காசி மாவட்டத்தில் திட்டப்பணிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. அதற்கென்று இவ்வளவு தூரம் நான் வந்து, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் போக முடியுமா? போனால், நீங்கள் விட்டுவிடுவீர்களா! அதற்கும் நான் அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
அறிவிப்புகள்
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தென்காசி மாவட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு 15 கோடி ரூபாய் செலவில், 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
சங்கரன்கோவில், மேல-நீலித-நல்லூர் பகுதிகளில் இருக்கின்ற பெண்களுக்கு - அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய குருக்கள்பட்டி சிப்காட் திட்டத்தின் நீர்த் தேவைகளை நிறைவு செய்ய, 52 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.
தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, 6 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
சிவகிரி, கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் வட்டங்களில் இருக்கின்ற விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்த பகுதிகளில் இருக்கின்ற பல்வேறு முக்கிய கண்மாய்கள் 12 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
தென்காசி வட்டம், சிவசைலம் கிராமத்தில் இருக்கின்ற கடனா அணை 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
கடையநல்லூர் வட்டத்தில் இருக்கின்ற வரட்டாறு பாசன அமைப்பின் கீழுள்ள அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் 4 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
செங்கோட்டை வட்டத்தில், அடவி நயினார்கோயில் அணைத் திட்டத்தின் கீழுள்ள அணைக்கட்டுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் 5 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கின்ற மாறாந்தை கால்வாய் 2 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.
ஆலங்குளத்தில் இருக்கின்ற அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 1 கோடி ரூபாய் செலவில் குடிநீர் மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.