

தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 16 முதல் 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் பாம்பு பிடிப்பதற்காக 601 அழைப்புகள் வந்துள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 424 அழைப்புகள் வந்துள்ளதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் மழைக்காலத்தையொட்டி ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கட்டு விரியான், நாகப் பாம்பு போன்ற விஷமுள்ள பாம்புகளும், விஷமற்ற தண்ணீர் பாம்புகளும் இதில் அடக்கம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தகவலின்படி, அக். 16 - 27 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 601 அழைப்புகள் வந்துள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 424 அழைப்புகள். இந்த அழைப்புகளில் 61 பாம்புகள் விஷமுடையவை, 363 பாம்புகள் விஷத்தன்மையற்றவை.
அடுத்தபடியாக செங்கல்பட்டில் 73 அழைப்புகள், காஞ்சிபுரத்தில் 41 அழைப்புகள், திருவள்ளூரில் 62 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பிடிக்கப்பட்ட 103 பாம்புகள் விஷமானவை. 498 பாம்புகள் விஷமற்றவை.
சென்னையில் இருந்து வந்த அழைப்புகளில் பெரும்பாலும் மேடவாக்கம், தாம்பரம், பள்ளிக்கரனை, பெரும்பாக்கம், வேளச்சேரி போன்ற தென்சென்னையில் இருந்தே வந்துள்ளன. சில அழைப்புகள் கீழ்ப்பாக்கம் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் இருந்து வந்தன. இவற்றில் பெரும்பாலான பாம்புகள் வீடுகள், திறந்தவெளி திடல்கள், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட பாம்புகள் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாம்பு போன்ற விஷ உயிரினங்களைப் பிடிக்க அவசர உதவி எண் - 044-22200335
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.