

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தி கடிதம் கொடுத்திருக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்களுடன் இன்று காலை பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் இன்று காலை முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று காலை பசும்பொன் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு தரப்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் ஐயா. மேலும், தேவர் ஐயாவுக்கு புகழ் சேர்க்கும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் அவரது முழு உருவப்படத்தை திறந்தார் எம்ஜிஆர்.
புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார். அம்மா அவர்கள் தேவருக்கு நந்தனத்தில் முழு உருவச் சிலையை நிறுவினார்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, நாட்டு மக்களுக்காக உழைத்தவர். இவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறோம். கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். தனக்கு சொந்தமான நிலத்தை ஏழை, எளிய மக்களுக்கு அளித்தவர் தேவர் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படிக்க... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.