

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இன்று மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விஜய், பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பின்னர், தவெக நிர்வாகிகள் பலர் தலைமறைவாக இருந்த நிலையில் முதல்முறையாக விஜய்யும் சமூகவலைதளங்களில் தனது படத்தை வெளியிட்டுள்ளார்.
தவெக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், நவ. 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்ட முடிவெடுக்கப்பட்டது. தவெக நிர்வாகிகள் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.