

இந்தியாவின் இரும்பு மனிதர் சா்தாா் வல்லப பாய் பட்டேலின் மறு உருவமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திகழ்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சா்தாா் வல்லப பாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "இந்தியாவின் இரும்பு மனிதராக சா்தாா் வல்லப பாய் பட்டேல் விளங்கினார். தற்போது, இரண்டாவது இரும்பு மனிதராக உள்துறை அமைச்சர் அமித்ஷா திகழ்கிறார். பட்டேலின் மறு உருவமாகவே அமித்ஷா செயல்பட்டு வருகிறார்" என்று குறிப்பிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று சேர்ந்திருப்பது பாஜகவிற்கு பலமா அல்லது அதிமுகவிற்கு பலவீனமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நைனார் நாகேந்திரன், "அவர்கள் வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அது அமையும். அதைப்பற்றி நான் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது. தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின் போது பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர்.
இது, வரவிருக்கும் தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதைப் போல் தெரிகிறது. நாங்கள் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்க வேண்டிய அவசியமே இல்லை. முதல்வருக்கு பயம் வந்துவிட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தபோதுதான் கொண்டு வந்தார்கள்.
திமுக அரசு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளது, ஆனால் எதையும் செய்யவில்லை. இந்த வருடம் பொங்கல் பரிசாக 5000 ரூபாய் கூட கொடுப்பார்கள். ஆளுங்கட்சியினர் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அந்த சுதந்திரம் இல்லை என்றார். தமிழக வெற்றி கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.