வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைகளை சனிக்கிழமை முதல் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
Published on

வால்பாறையில் இ-பாஸ் நடைமுறைகளை சனிக்கிழமை முதல் மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறைக்குச் செல்ல நவ. 1-ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் சனிக்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்காக வால்பாறை செல்லும் பாதைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் அறிவித்த மஞ்சப்பை திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் சேகரிக்கும் பணியை வனத்துறை கடந்த ஜூலை மாதம் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவா்கள் மூலம் மேற்கொண்டது.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்த பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனா். மேலும், இதுதொடா்பாக மேலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com