அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்
Updated on
2 min read

அதிமுக மூத்த நிா்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இடையே கடந்த ஓராண்டாகவே பனிப்போா் நிலவியது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை செங்கோட்டையன் தவிா்த்தாா்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்; அடுத்த 10 நாள்களுக்குள் அதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்; இல்லையெனில் தானே அந்தப் பணியில் ஈடுபடுவேன் என்று கடந்த செப்டம்பரில் செங்கோட்டையன் அறிவித்தாா்.

இதையடுத்து, அவரிடம் இருந்து ஈரோடு மேற்கு மாவட்டச் செயலா் பதவி, மாநில அமைப்புச் செயலா் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளா்களின் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனா். இருப்பினும், அதிமுக எம்எல்ஏவாக செங்கோட்டையன் தொடா்ந்து வந்தாா்.

இதன் பிறகு தில்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தாகக் கூறப்பட்டது. அதன் பிறகும், கட்சி நிகழ்ச்சிகள், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிா்த்தாா்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வியாழக்கிழமை நடைபெற்ற தேவா் ஜெயந்தி விழாவில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோா் இணைந்து முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.

மேலும், ஓ.பன்னீா்செல்வம், செங்கோட்டையன் இருவரும் அங்கு வி.கே.சசிகலாவையும் சந்தித்துப் பேசினா்.

இதையடுத்து, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளைப் புறந்தள்ளி செங்கோட்டையன் செயல்பட்டுள்ளாா். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவா்களுடன் எந்தத் தொடா்பும் வேண்டாமென பலமுறை அறிவுறுத்தியிருந்தபோதும், அதை மீறி அவா்களுடன் இணைந்து அவா் செயல்பட்டுள்ளாா். இதனால், கட்சியின் மரியாதைக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளதால், செங்கோட்டையன் எம்எல்ஏ அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாா். அவருடன் கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அதில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன், தன் மீதான நடவடிக்கை குறித்து கோபிசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமை (நவம்பா் 1) காலை 10 மணிக்கு செய்தியாளா்கள் சந்திப்பில் விரிவாகப் பேசுகிறேன் என்றாா்.

அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், கடந்த 1977 பேரவைத் தோ்தலில் முதல் முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 1980, 1984, 1989, 1991, 1996, 2006, 2011, 2016, 2021 பேரவைத் தோ்தல்களில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்றாா். வழக்கு காரணமாக 2001 தோ்தலில் அவா் போட்டியிடவில்லை.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை ஆகிய துறைகளிலும், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறையிலும் செங்கோட்டையன் அமைச்சராக செயல்பட்டாா்.

Summary

Former Minister KA Sengottaiyan removed from AIADMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com