பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் அடுக்குமாடி குடிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் அடுக்குமாடி குடிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை புகா் மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் ஜெ.பிரஷ்நேவ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கரணை மட்டுமன்றி அந்த சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்தவிதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என சிஎம்டிஏ-வுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வி.ராகவாச்சாரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வரைபடத்தை தாக்கல் செய்தாா். மத்திய அரசு ராம்சா் தலங்களாக அறிவித்துள்ள சதுப்பு நிலப் பகுதியில் 1400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இது சட்டவிரோதமானது.

சென்னை மற்றும் அதன் புகா் பகுதிகளில் இருந்து வரும் மழை வெள்ளநீரை உறிஞ்சக் கூடிய நிலப்பகுதிதான் இந்த சதுப்பு நிலம். அத்தகைய சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெறும் மூன்று நாள்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது பொதுநலன், சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது. இந்த அனுமதியை வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டாா்.

அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், மனுதாரா் குறிப்பிடும் பகுதி சதுப்பு நிலம் இல்லை. சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை. பட்டா நிலத்தில்தான் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் வகையில், அதன் எல்லைகளை துல்லியமாக அளவிடும் பணி 2 வாரங்களில் முடிந்துவிடும். தற்போது கட்டப்படும் கட்டடத்துக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படியே, சிஎம்டிஏ அனுமதி வழங்கியுள்ளது என்று வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், சிஎம்டிஏ எப்படி அனுமதி வழங்கியது?

சதுப்பு நில எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் முடிவதற்கு முன்பே கட்டுமானங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கினால், ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்துவிடும். இது மிகவும் தீவிரமான பிரச்னை. சதுப்பு நில பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால், கட்டுமானத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பது அவசியமாகிறது என்று கருத்து தெரிவித்தனா்.

பின்னா், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதுவரை அந்தப் பகுதியில் எந்த கட்டுமானப் பணிகளையும் தனியாா் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com