
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே தொடர்ந்து அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வருகிறது.
கட்சியின் தலைவர் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகவும், செயல் தலைவர் பதவிக்கு அன்புமணியை நியமிப்பதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கூட்டிய அன்புமணி, தனது பலத்தை நிரூபித்தார். மேலும் தலைவர் பதவியில் 2026 ஆம் ஆண்டு வரை அன்புமணி நீடிக்க பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டினார். இந்த கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைத்து பேசப்பட்டன. மேலும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 16 ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அன்புமணி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி 16 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கக் கூறி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிந்த நிலையில், பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது.
எம்எல்ஏ ஆர். அருள், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அருள் அளித்த பேட்டி:
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் நாங்கள் 9 பேரும் கூடி விவாதிப்போம். இதைத் தொடர்ந்து அறிக்கை தயார் செய்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் அறிக்கையை அளிப்போம். அறிக்கையை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் பாமக நிறுவனர் ராமதாஸின் முடிவாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி சந்தித்து, நான் செயல் தலைவராக செயல்படுவேன் எனக் கூற வேண்டும். அந்த நாளுக்காகத் தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
ராமதாஸிடம் அன்புமணியிடம் நேரில் விளக்கம் அளித்தாரா என்பது தெரியவில்லை. தொலைபேசி மூலம் விளக்கம் அளித்து இருக்கலாம்.
சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார். இந்த கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.