முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி கேள்விகளில் உள்ள குளறுபடிகள் பற்றி...
தவறான மொழிபெயர்ப்பு
தவறான மொழிபெயர்ப்பு
Published on
Updated on
2 min read

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் தேர்வு மாநில முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் கேள்வித் தாளில் இடம்பெற்ற இரண்டு கேள்விகள் தவறுதலாக அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

The God of Hair Cutting (தி காட் ஆஃப் ஹேர் கட்டிங்)

பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் வழங்கப்பட்ட முதல் விருப்பத்தில், ”முடிசூடும் பெருமாள் என்றும் முத்துக்குடி என்றும் அழைக்கப்பட்டார்” என அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், இதே கேள்வி ஆங்கிலத்தில் முடிசூடும் பெருமாள் என்ற இடத்தில் தி காட் ஆஃப் ஹேர் கட்டிங் என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

விருதை பிச்சை எடுத்தார்களா?

மக்களைத் தேடி மருத்துவம் பற்றிய உண்மை தகவல்களை அடையாளம் காணவும்? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான மூன்றாவது விருப்பத்தில், “ஐக்கிய நாடுகள் அவையில் 2024 ஆம் ஆண்டு விருது பெற்றது” என அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆங்கிலத்தில் bagged (பெற்றது) என அச்சிடுவதற்கு பதிலாக begged (பிச்சை எடுத்தது) என எழுத்துப் பிழையுடன் அச்சடிக்கப்பட்டிருந்தது.

முக்கியமான இரு கேள்விகள் தவறுதலாக அச்சிடப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணகான இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் தயாராகி தேர்வு எழுத வந்தால், இப்படி அலட்சியமாக கேள்வித் தாளைத் தயார் செய்வதா? என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை கண்டனம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கண்டன பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.

அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை, "It Begged the United Nations award" - பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

திமுக தலைவர்கள், காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.

எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

TNPSC exam question paper has become controversial due to the incorrect translation of Ayya Vaikunda Swamy's name into English.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com