
வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை அறிந்திருப்பீர்கள்.
சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொதுவாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடர்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது. அன்பு உடன்பிறப்புகளும் நடைப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு, உடல்நலன் காத்து, உங்கள் குடும்பத்திற்கும் கட்சிக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கவனமெல்லாம் தமிழ்நாட்டில்
எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது.
அயலக மண்ணில் தமிழ்க் கலை
எந்த வெளிநாடுகளுக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் இரசித்தாலும் நம் பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெர்மனியில் தமிழர்களுடனான சந்திப்பை நடத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஐரோப்பாவில் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் சேவைகளைக் கேட்டு மகிழ்ந்து, அந்த சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்.
ஆர்வத்துடன் குவிந்த முதலீடுகள்
தொழில் – உற்பத்தி - வர்த்தகம் மூன்றின் நுணுக்கங்களையும் நன்கறிந்திருக்கும் தொழில்துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்’‘ என்று சொல்லி, கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை சிறப்பாக விளக்கினார்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
லண்டனில் தமிழ் விருந்து
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.