
பாஜகவின் குரலாக மாறிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்து மத்திய அரசு நேற்று(செப். 3) அறிவிப்பு வெளியிட்டது. தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு பாஜக ஆதரவு கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்வதற்கும் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும் பிரதமர் மோடிக்கும் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஜிஎஸ்டி கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு மீதான நிவாரணம் ஆகியவை எளிமை, நியாயத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.
இது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இபிஎஸ்ஸின் இந்த பதிவைப் பகிர்ந்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில்.
"அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் குரலாக மாறிவிட்டார் என்பதற்கான சான்றாக இந்தப் பதிவை நான் கருதுகிறேன்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி விதிமுறைகளை நீங்கள் பாராட்டினாலும் மாநிலத்தின் வருவாயைப் பாதுகாக்கவும், மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பாதுகாக்கவும் மத்திய அரசு முறையான நிதிப் பகிர்வு அல்லது வருவாய் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்பதை ஏன் ஒரு வரியில் கூட நீங்கள் குறிப்பிடவில்லை?
தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான தங்கள் பங்களிப்பைத் தக்கவைக்க வலுவான நிதி உதவியைப் பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து தெளிவான உறுதிப்பாட்டை நீங்கள் ஏன் கோரவில்லை? தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் வசதிக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நிதி நலனையும் உரிமைகளையும் புறக்கணிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.