
ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலைமறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் ( 38), இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி ஒன்றிய பாஜக தலைவரான குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரிடம் 15 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய சக்திவேல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக ராஜேஷ் பலமுறை சக்திவேலின் உறவினர்களிடம் வந்து பணம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வருகை தந்த சக்திவேலின் தம்பி பிரகதீஸ்வரன் (29) என்பவரிடம் 15 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமென ராஜேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ராஜேஷ் குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகதீஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து பாப்பாநாடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரகதீஸ்வரனின் உடலை போலீஸார் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.