
தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நான் ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். ஆனால் தில்லி சென்றதுமே அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்று நோக்கத்திலும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருத்துகளை எடுத்துச் சொன்னோம்.
என்னுடைய கருத்துகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்ல உரிமை உள்ளது. அவரவருடைய கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கக்கூடிய ஒன்று.
இந்த சந்திப்பின்போது ரயில்வே அமைச்சரும் அங்கு இருந்தார். ஈரோட்டிலிருந்து ஏற்காடு செல்லும் ரயில் முன்கூட்டியே புறப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், அதன் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அதை பரிசீலிப்பதாக அமைச்சர் சொன்னார்.
மக்கள் பணி செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறினார்.
செங்கோட்டையன் பதவி பறிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், செப். 5 ஆம் தேதி செய்தியாளர்களுடன் பேசுகையில், பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்களை இணைத்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையன், மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் தில்லியில் மத்திய பாஜக அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.