
காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது தொடர்பான மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் இரு நபர்களிடையே இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் மீது டிஎஸ்பி சங்கர் கணேஷ், ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், டிஎஸ்பி மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய உத்தரவிட்டது. அதன்படி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வழக்கின் முழு விவரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியா்களை முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். முருகனின் புகாரின் பேரில் போலீசாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். பேக்கரி உரிமையாளா் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்கு பதிவு செய்தனா்.
இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு செய்தும் கைது செய்யப்படாமல் இருந்தனா்.
இதுகுறித்து முருகன் தரப்பினா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத தவறியதாக திங்கள்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷூக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ப.உ. செம்மல், மாலை 5 மணிக்குள் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாவிட்டால் டிஎஸ்பியை சிறையில் அடைப்பேன் என எச்சரித்தாா் .
இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீஸாா், அவர்களைத் தேடி வந்த நிலையில் நீதிபதி ப.உ. செம்மல் நீதிமன்றத்தில் காத்திருந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.
இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை சீருடையிலேயே காஞ்சிபுரம் கிளை சிறை சாலைக்கு சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா்.
இதையும் படிக்க | தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.