
சேலம்: சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டது.
சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்றும் 9 மாத பெண் குழந்தை ரித்திகா மற்றும் உறவினர்களுடன் அழகாபுரம் காவல் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் தங்கி இருந்து கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து இது தொடர்பாக அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அழகாபுரம் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதில் குழந்தை காணாமல் போனதாக பெற்றோர் கூறிய நேரத்தின் போது இரு சக்கர வாகனத்தில் ஒருவர் குழந்தையுடன் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வாகனத்தின் பதிவெண் கொண்டு அதன் உரிமையாளரை தேடிய போது பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. அவருடைய அலைபேசி எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்ட போது அந்த எண் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. பின்னர் அவருடைய செல்போன் டவரை சோதித்து பார்த்தபோது நாமக்கல் மாவட்டம் துறையூர் என தெரிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் துறையூர் விரைந்து ரமேஷை பிடித்துள்ளனர். அப்போது திருடு போன குழந்தை அவருடன் இருந்தது கண்டறிந்து மீட்கப்பட்டது. விசாரணையில் ரமேஷுக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருப்பதும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து நோட்டமிட்டு இந்த குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.