
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலகவுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பரவும் தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர், “பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. என் மீது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் தனது வீட்டுக்கு நேரில் வந்து நலம்விசாரித்துச் சென்றார்.” என பதிலளித்தார்.
அதிமுகவை பாஜக உடைத்துவிட்டதாக திமுகவின் விமர்சனத்துக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ அதிமுக இன்றும் பலமாகவே உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் மக்கள் வெள்ளமாக திரண்டு வரவேற்பு அளிப்பதால் திமுகவுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.