கோவை: கோவை அருகே சாலையோர முட்புதரில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் சாலையோர முட்புதரில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக சுந்தராபுரம் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த இளைஞர், கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பது தெரியவந்தது.
குடிபோதைக்கு அடிமையான வெங்கடேசன், கடந்த சில நாள்களாக முதுகு வலி இருப்பதாக வீட்டில் கூறி வந்துள்ளார். இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சாலையோர முட்புதரில் உயிரிழந்த நிலையில் வெங்கடேசன் கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர் கொலை செய்யப்பட்டாரா ? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலக் குறைவால் உயிரிழந்தாரா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.