வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி
வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்
Published on
Updated on
1 min read

நெல்லை: வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு நீதி, கிராம மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட மலைக்கிராம மக்களின் மனு மீது ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியதால் அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திகைத்தனர்.

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு, திருப்பணிபுரம் மலை கிராம மக்கள், தங்களுக்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வனத்துறை தடுத்து வருவதாகப் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விசாரணையின்போது, கிராமத்திற்கு அருகே வனத்துறை அலுவலகம் உள்ளதா என ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அதற்கு, 10 கி.மீ தொலைவில் அலுவலகம் இருப்பதாகவும், அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"வனப்பகுதியில் மின்சாரம் வழங்க சட்டம் அனுமதிக்காது என்று கூறும் நீங்கள், உங்கள் அலுவலகத்திற்கு மட்டும் எப்படி மின்சாரம் பெற்றீர்கள்? சட்ட விதிகள் உங்களுக்குப் பொருந்தாதா?" என அவர் கேட்டபோது, அதிகாரிகள் மௌனம் காத்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த ஆணைய உறுப்பினர், நாளை அந்த கிராமத்தில் நேரில் ஆய்வு செய்யப்போவதாக அறிவித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

மேலும், சங்கரன்கோவிலில் போலீசாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வேன் ஓட்டுநர் மரணம் தொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டது.

ஓட்டுநர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், "அவரது உடலில் இருந்த 9 காயங்களுக்கு என்ன காரணம்? அவருக்கு மன அழுத்தத்தை உருவாக்கியதே போலீசார்தானே?" என ஆணையம் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதிலளிக்க முடியாத நிலையில், உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இதனுடன், இன்று மட்டும் மொத்தம் 10 மனித உரிமை மீறல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Summary

The State Human Rights Commission has raised the question, "Is justice for the forest department office, justice for the villagers?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com