எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

திமுக தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம்.
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. அரிமா நோக்கு போல 75 ஆண்டுகாலக் கழகத்தின் வரலாற்றுத் தடத்தைப் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து, உன்னத இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்கான பாசறை. பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்" என உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்,

வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்,

நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்,

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்,

‘பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என,

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரை, அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் ஒன்றுதிரட்டி, உறுதிமொழியேற்றிட வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க அரசின் வஞ்சகத்தாலும், அதனிடம் அடிமையாக இருக்கின்ற அ.தி.மு.க.வின் துரோகத்தாலும் நாம் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு முன்னேறியுள்ளோம். பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாகக் கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.கழகம். நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.

2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த முப்பெரும் விழா.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK President MK Stalin's letter to Party cadres.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com