
பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"திமுக கூட்டணியை மட்டும் வைத்து பலமாக இருந்தால் போதுமா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அகற்றுவோம். உறுதியாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும். திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்.
விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து ஒரு பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதுதான். அவர் பாஜகவை எந்த வகையில் விமர்சனம் செய்வது சரியாக இருக்கும். அவர்கள் கவுன்சிலர்கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏகூட கிடையாது. இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு (விஜய்) தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்.
புதிதாக கட்சி ஆரம்பித்ததால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள். தேர்தல் களத்தில் எவ்வளவு ஓட்டு வாங்குகிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்று வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.