
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 14) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக ஓசூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ஓசூர், சூளகிரி, குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் நடந்து சென்று, சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், 270 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவிலான 193 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 562 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,23,013 பயனாளிகளுக்கு 2,052 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல்வர் பேசுகையில், “அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
கெலமங்களத்தில் ரூ. 12 கோடியில் சாலைகள் அமைக்கப்படும்.
ஒசூரில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
கெலமங்களம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
ஒசூர் மாநகரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க புதிய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.