அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை
Published on
Updated on
1 min read

நமது நிருபர்

புது தில்லி, செப். 16: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.

அப்போது, இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், அதிமுக விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் அமித் ஷா வியூகம் அமைக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்தார்.

இதைத் தொடர்ந்து, செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் இருந்து தில்லி வந்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி ஆகியோர் வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை மு.தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

இரவு 8.10 மணியளவில் தில்லி கிருஷ்ணன் மேனன் மார்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் அவரை எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் மூத்த தலைவர்களும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிஷங்கள் நீடித்தது. அதன் பிறகு, அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணியைப் பலப்படுத்துவது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் சேர்க்கும் விவகாரம், புதிதாக கட்சி தொடங்கி விஜய் மேற்கொண்டுவரும் பிரசாரம், தமிழக அரசியல் சூழல், சட்டம் - ஒழுங்கு விவகாரம் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க | தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

Summary

Edappadi Palaniswami met Amit Shah in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com