மயிலாடுதுறையில் இளைஞர் ஆணவக் கொலை! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பற்றி...
honour killing in Mayiladuthurai
மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் (உள்படம்: கொலை செய்யப்பட்ட வைரமுத்து) X
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ரூரல் ஊராட்சி அடியாமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவைச் சேர்ந்த குமார் - ராஜலட்சுமி தம்பதியினரின் மகன் வைரமுத்து(28) டிப்ளமோ பட்டதாரி. மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய பெண்ணை வைரமுத்து கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த செப். 5 ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக அந்த பெண் ஊருக்கு வந்தபோது, அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து, தான் வைரமுத்துவைக் காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பெண்ணுக்கும் பெண்ணின் தாயார், சகோதரர்கள் குகன், குணால் அகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அந்த பெண், வைரமுத்துவின் வீட்டிற்கு வந்ததாகவும் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சமாதானமடைந்த அவர், சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்து ரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கே வைரமுத்துவை வரச் சொல்லியிருக்கிறார்.

தகவலறிந்த பெண்ணின் சகோதரர் குணால், அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கியதுடன் 'என் அக்காவுடன் பழகினால் உன்னை கொலை செய்துவிடுவேன்' என்று வைரமுத்துவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணின் தாயாரும் வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று கடுமையாக திட்டியுள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் என் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் என்னை அனுப்பி வைத்தால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த செப். 12 அன்று காவல்துறை விசாரணைக்கு பிறகு வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். அப்போது பெண்ணின் தாய் மற்றும் சகோதர்கள், 'இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை. எங்கள் வீட்டில் எந்த நிகழ்வுகளுக்கும் வரக் கூடாது' என்று தெரிவித்து எழுதிக் கொடுக்கும்படி கேட்டதோடு மட்டுமின்றி நீங்கள் எப்படி உயிரோடு வாழ்கிறீர்கள் என்று பார்க்கிறோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

செப். 15 ஆம் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் வைரமுத்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது வழிமறித்த பெண்ணின் சகோதரர்கள் குகன், குணால் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வைரமுத்துவை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பெண்ணின் தாயார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. தனது மகளை தனது சொந்த சமூகத்தில் திருமணம் செய்து வைக்க நினைத்துள்ளார். தாயின் தூண்டுதலின் பேரிலேயே பெண்ணின் சகோதரர்கள் இந்த கொலையைச் செய்துள்ளதாக பேசப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார் வைரமுத்து. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகள் இந்த படுகொலைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பெண்ணின் தாயார், வைரமுத்துவை மிரட்டிய வீடியோ அடிப்படையில் காவல்துறையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Honour killing: Youth murdered in Mayiladuthurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com