கோப்புப் படம்
கோப்புப் படம்

மருத்துவப் படிப்பு காலியிடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு: உயா்நீதிமன்றம் உத்தரவு

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும்
Published on

காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களுக்கு 4 வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்புகளை முடித்த மருத்துவா்கள் அஜிதா, பிரீத்தி, நவநீதம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடு முழுவதும் 5,000 சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் சேர நீட் தோ்வு எழுதி தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில், பங்கேற்ற தங்களுக்கு விரும்பிய மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்தக் கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யப்பட்டவா்கள் பலா் படிப்பில் சேரவில்லை. ஒருசிலா் சோ்ந்த பின்னா், அந்தப் படிப்பை விட்டுச் சென்றுள்ளனா். இந்த வகையில், கலந்தாய்வு முடிந்த பின்னரும், நாடு முழுவதும் தற்போது 600 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 40 இடங்கள் காலியாக உள்ளன. அதுவும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த 600 இடங்களுக்கு 3-ஆவது முறையாகக் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், இதுபோன்ற மருத்துவப் படிப்புக்கான இடங்கள் வீணாகக் கூடாது. கூடுதலாகக் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு அளித்துள்ளது. எனவே, காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காலியாக உள்ள சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு இடங்களுக்கு 4 வாரங்களுக்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணைய செயலா் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com