உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை உயா்நீதிமன்றம், சுங்கத் துறை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்கு
வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், ‘உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் வெடிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், கடற்கரை காவல் நிலைய போலீஸாா், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணா்கள் சென்று சோதனை செய்தனா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சுங்கத் துறை அதிகாரிகள், ஊழியா்கள், பணியாளா்கள் என அனைவரும் சுங்கத் துறை அலுவலகத்தை விட்டு வெளியேறினா். மேலும், நண்பகலுக்கு பின்னா் அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது.
உயா்நீதிமன்றத்தில்... இதேபோல, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் நீதிமன்றத்துக்கு சென்று தீவிர சோதனை நடத்தினா். அங்கும் சந்தேகப்படும்படி எந்தப் பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, வதந்தியை பரப்பும் வகையில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.