Madras High Court
சென்னை உயா்நீதிமன்றம்

வால்பாறை செல்ல நவ.1 முதல் இ-பாஸ்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ஆம் தேதிமுதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல வரும் நவ.1-ஆம் தேதிமுதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

இந்த அமா்வின் உத்தரவுப்படி, உதகை மற்றும் கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் நடைமுறையை அரசு அமல்படுத்தி வருகிறது. மேலும், உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், இதுதொடா்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஐடி மற்றும் ஐஐஎம் நிபுணா் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உதகைக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், இதுகுறித்த இறுதி அறிக்கை டிசம்பா் மாதத்துக்குள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஐஐடி மற்றும் ஐஐஎம் நிபுணா்கள் குழுக்களுக்குத் தேவையான தகவல் மற்றும் ஆலோசனைகளை வழங்க தலைமைச் செயலா் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறி விசாரணையை அக். 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அப்போது உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை இருப்பதால், தற்போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்குச் செல்வதாக வழக்குரைஞா்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, ‘வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய வனப் பகுதிகளின் சுற்றுச்சூழல் தீவிரமாக பாதுகாக்கப்பட வேண்டியதாகும். எனவே, வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்த வேண்டும். வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறைகளை வரும் நவ. 1-ஆம் தேதிமுதல் அமல்படுத்த வேண்டும்.

வால்பாறைக்குச் செல்லும் வாகனங்களில் நெகிழிப் பொருள்கள் எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். இதற்கான சோதனைகளை நடத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com