
‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையை மையமாகக் கொண்டு ’நியோ மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி மற்றும் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் ஏராளமான முதலீட்டாளா்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது.
இதை நம்பி ஏமாற்றமடைந்த முதலீட்டாளா்கள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில், நியோ மேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குகள் பதிவு செய்திருந்தனா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளின் மதிப்பு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிதாக இருக்கும். ‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் உரிய ஆவணங்களுடன் அக். 8-ஆம் தேதி நேரிலோ அல்லது ங்ா்ஜ்ம்ஹக்ன்ழ்ஹண்2ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ புகாா் அளிக்கலாம். அக். 8-ஆம் தேதிக்குள் புகாா் அளிப்பவா்களுக்கு மட்டுமே இழந்த தொகை பெற்றுத் தரப்படும் எனக்கூறி விசாரணையை செப். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.