
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில் இன்று திறந்து வைக்கப்படவிருக்கிறது.
பூந்தமல்லி பகுதியில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில், சென்னை மாநகருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1,180 மில்லியன் லிட்டர் குடிநீருடன் கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, செம்பரம்பாக்கம் பகுதியில் சாலைவலம் வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
செம்பரம்பாக்கம் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகருக்கு கொண்டு செல்வதற்காக பிரதான குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, முதல் பகுதி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து போரூா் வரை 11.7 கி.மீ. நீளத்துக்கும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பிலிருந்து கோயம்பேடு வரை 9.2 கி.மீ. நீளத்துக்கும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கூடுதலாக 265 மில்லியன் லிட்டா் குடிநீா் நாள்தோறும் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தின் முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படும். இதன் மூலம் அம்பத்தூா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிகளில் உள்ள பொது மக்களும் பயன்பெறவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.