
மக்களுடன் ஸ்டாலின் செயலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.
விடியோவில் அவர் தெரிவித்ததாவது,
கேள்வி: தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழ்நாடு குறித்த பார்வை எவ்வாறு உள்ளது?
முதல்வர் பதில்: தமிழ்நாட்டில் கட்டமைப்பு, படித்த இளைஞர்கள், திறன் மேம்பாடு குறித்து ஜெர்மனி மாநாட்டில் வியந்தனர்.
ஜெர்மனியில் எனக்கு அவர்கள் கொடுத்த பாதுகாப்பின் மூலமே, தமிழ்நாட்டின் மீது அவர்கள் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்தியாவிலேயே அதிகளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதைப் பெருமையாகச் சொன்னார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பரவலான வளர்ச்சியைக் கொண்டுசெல்வதிலும், புதிதாக வளர்ந்துவரும் துறைகளின் மீதான கவனம் குறித்து அவர்கள் பாராட்டிப் பேசினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கிறார்கள். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
கேள்வி: ஆக்ஸ்போர்டு பயணம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் சந்திப்பு குறித்து..
முதல்வர் பதில்: ஆக்ஸ்போர்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான பல்கலைக் கழகம். பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பேராசிரியர்கள், மாணவர்கள் முன்பு பெரியாரின் சிலையைத் திறந்துவைத்து பேசியபோது மெய்சிலிர்த்தது.
ஜெர்மனியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தபோது, இடஒதுக்கீட்டில் படித்து, முன்னேறிதான் வெளிநாடு வந்தததாகக் கூறினர். என் குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறை பட்டதாரி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி ரத்து செய்ததுதான், இந்தளவுக்கு முன்னேறியதற்குக் காரணம்.
அரசுப் பள்ளியில் படித்து, தற்போது லண்டனில் உயர்கல்வியில் படிப்பவர்கள், திமுக அரசின் ஸ்காலர்ஷிப்பால்தான் இங்கு வந்ததாகவும் கூறினர். இந்த மாதிரியான பல மறக்க முடியாத அனுபவங்கள் கொண்டதாகத்தான் ஐரோப்பிய பயணம் அமைந்தது.
அங்குள்ள மக்கள், பொது இடங்களில் எந்தளவுக்கு தன்னொழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். அதே பொறுப்புணர்ச்சி இங்கும் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று வந்தது - வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில் முதலீடா? என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், முதல்வரின் விளக்க விடியோ வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.