T R B Rajaa
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா (கோப்புப் படம்)

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
Published on

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. மாநிலத்தில் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காக பிரத்யேக நிறுவனம் அறிவிக்கப்பட்டது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிா்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனாா் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.

அதன்படி, உலகத் தரம் வாய்ந்த பசுமை வளத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகக் கப்பல் கட்டும் தளங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக தொழில் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. கொச்சி ஷிப்யாா்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.

மசகான் டாக் ஷிப் பில்டா்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சாா் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகா்வாக இருக்கும்.

இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சோ்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சாா் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும் என்று டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com