
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகும் ஆவின் பொருள்களின் விலையை தமிழக அரசு குறைக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற கொழுப்பு அதிகமுள்ள பால் வகைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமுல், நந்தினி போன்ற பிற மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்கள், மதர் டைரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. நெய் போன்ற பொருள்களின் விலை லிட்டருக்கும் ரூ. 25 முதல் 40 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் இதுவரை விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன்பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.
ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலைகள் மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். அப்படியில்லாமல் அதே விலையில் விற்க வேண்டும் என்றால் பால் பொருள்களின் அடிப்படை விலையை உயர்த்த வேண்டும்.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள். ஆவின் பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டனவா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
அமுல் நிறுவனம் 700 -க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் விலைகுறைப்பு செய்ய மறுப்பதன் நோக்கம் என்ன? ஆவின் பொருள்களை பயன்படுத்தும் ஏழை மக்களை சுரண்டி அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.