டிடிவி தினகரனுடன் பேசியது என்ன? அண்ணாமலை விளக்கம்!

டிடிவி தினகரனுடனான பேச்சுவார்த்தை குறித்து அண்ணாமலை விளக்கம்...
டிடிவி தினகரன் - அண்ணாமலை
டிடிவி தினகரன் - அண்ணாமலை
Published on
Updated on
2 min read

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”டிடிவி தினகரன் 2024 முதல் எங்களுடன் பயணம் செய்கிறார். கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணத்தில் இருந்ததால், சென்னை வந்தவுடன் அவரை சந்தித்துப் பேசினேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தோம்.

டிடிவி தினகரனுடன் எனக்கும் பாஜகவுக்கும் நட்புறவு தொடர்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவரது முடிவுக்கு காத்திருக்கிறோம். தேர்தல் களத்தின் சூடு வரும்போது, முடிவுகள் மாறும் என நம்புகிறேன்.

2024 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்களை நம்பி வந்தவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். அரசியல் நிரந்தர எதிரிகள், நண்பர்கள் கிடையாது, கூட்டணிகள் மாறும்.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கேரளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் மாநாடு குறித்து அண்ணாமலை பேசியதாவது:

”கேரளத்தில் தொடர்ந்து பாஜக தொண்டர்களை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவினரை தொடர்ந்து படுகொலை செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024 -25 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 421 கோடி காணிக்கையாக பக்தர்கள் கொடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளிலும் தலா ரூ. 350 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு சபரிமலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பெயர் பிக்-பாக்கெட் இல்லாமல் வேறென்ன?

தமிழகத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் மாநாட்டுக்குச் சென்றனர். சபரிமலையில் தமிழக அரசுக்கு 5 ஏக்கர் ஒதுக்குமாறு அமைச்சர் சேகர் பாபு கோரிக்கை வைக்கிறார். தமிழகத்தில் காணாமல் போன 1.25 லட்சம் கோயில் நிலத்தை மீட்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் முதலில் பேச அழைக்கவில்லை என்று சண்டை போட்டுள்ளார். சநாதனத்துக்கு எதிராக பேசும் மு.க. ஸ்டாலினை எதற்காக பினராயி விஜயன் சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். அவர் போகாமல் இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார்.

பினராயி விஜயன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர். கடவுள் இல்லை என்பவர். அவர் ஏன் ஐயப்பனுக்கு மாநாடு நடத்த வேண்டும். ” எனத் தெரிவித்தார்.

Summary

Former TN BJP leader Annamalai has said that he met AMMK General Secretary TTV Dhinakaran in person and requested him to rejoin the National Democratic Alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com