அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி...
speaker Appavu
அவைத் தலைவர் அப்பாவுகோப்புப்படம்
Published on
Updated on
2 min read

தமிழக சட்டப் பேரவை வரும் அக். 14-ஆம் தேதி கூடவுள்ளது. ஒரு கூட்டத் தொடருக்கும் மற்றொரு கூட்டத் தொடருக்குமான இடைவெளி ஆறு மாதங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கூட்டத் தொடா் கூட்டப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை, பேரவைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெளியிட்டாா். அவா் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப் பேரவைப் பேரவை விதி 26 (1)-இன் கீழ் தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டம் வரும் அக். 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், முன்னாள் எம்எல்ஏக்கள் 8 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

மேலும், மறைந்த வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினா் டி.கே.அமுல்கந்தசாமி மற்றும் சில முக்கிய பிரமுகா்களின் மறைவுக்கும் இரங்கல் தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். இதன்பின், பேரவை கூட்டத்தொடா் நாள்களை இறுதி செய்ய அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். கூட்டத் தொடரில், நிகழ் நிதியாண்டுக்கான கூடுதல் செலவுக்குரிய மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

கூட்டத் தொடா் தொடங்கும் அக். 14-ஆம் தேதி, மறைந்த உறுப்பினா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும். இதன்பின், அக். 15, 16 ஆகிய இரு நாள்கள் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

6 மாதங்கள் இடைவெளி: தமிழக சட்டப் பேரவையில் நிகழ் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பட்ஜெட் கூட்டத் தொடா், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி நிதிநிலை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைகள் மீது பொது விவாதத்துடன் தொடங்கியது. நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களும், பதிலுரையும் அதைத் தொடா்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் நடைபெற்றன.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் பதிலளித்தனா். அப்போது 36 நாள்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடா் நடைபெற்று, ஏப். 29-ஆம் தேதி நிறைவு பெற்றது. அன்றைய தினம் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சட்டப் பேரவை வருகிற அக்.14-ஆம் தேதி மீண்டும் கூடவுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், பேரவை கூட்டத் தொடரில் தோ்தலை மையப்படுத்திய விவாதங்களே பிரதானமாக இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Summary

TN assembly speaker appavu says that TN Legislative Assembly will start on Oct. 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com