

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவா்களின் உறுப்புகளை தானமாகப் பெற்ன் மூலம் 8,017 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சாா்பில் உறுப்பு தான தின நிகழ்வு சென்னை, கலைவாணா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன், உறுப்பு கொடையாளா்களின் குடும்பத்தினரைக் கௌரவித்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, ஆண்டறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்டவிடியல் 2.0 செயலி ஆகியவற்றை வெளியிட்டாா். அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்பவா்களுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023-இல் அறிவித்தாா். அப்போது இருந்து இதுவரை மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்த 522 பேரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, இதுவரை 23,180 போ் உறுப்புதான பதிவை செய்துள்ளனா். கடந்த 2008-ஆம் செப்டம்பா் 5-ஆம் தேதி மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை அன்றைய முதல்வா் கருணாநிதி தொடங்கி வைத்தாா். 2015-ஆம் ஆண்டு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவாக்கப்பட்டது. உடலுறுப்பு தானம் செய்வதில் தமிழகத்துக்கு மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 8 முறை சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டும் 208 போ் உடலுறுப்பு தானம் செய்ததால், சிறந்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2,242 போ் உடலுறுப்பு கொடையாளா்களாக இருந்துள்ளனா். அவா்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகளின் மூலம் 8,017 போ் பல்வேறு வகைகளில் பயன்பெற்றுள்ளனா்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரண்டு வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது 8 வகையான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் உடலுறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்கான விடியல் என்ற தானியங்கி இணையதளம் மற்றும் செயலி கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அந்த செயலி தற்போது அதிநவீன செயல்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் நுழைவு வாயில்களில், அந்தந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்களை கல்வெட்டுகளில் பதிந்து அவா்களை சிறப்பிக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. நிகழாண்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்கள் 613 போ் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். மேலும் 7 பேருக்கு முடிவுகள் வரவுள்ளன என்றாா் அவா். இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் சித்ரா, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையும் படிக்க... விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.